தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏப்ரலில் ஓய்வு பெற்ற 70 நபர்களுக்கு ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை நேற்று வழங்கப்பட்டது. ஆணைகளை பெற்றவர்களுடன் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா மற்றும் அதிகாரிகள்.
சென்னை: ‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியது.
மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி, ஏப்ரல் மாதத்தில் பணி மூப்பு காரணமாக, ஓய்வு பெற்ற 70 ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) சென்னை மண்டலம் வழங்கி சிறப்பித்தது.
சென்னை, ராயப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா வழங்கினார்.
நிகழ்ச்சியில், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் (ஓய்வூதியம்) நீரஜ் சிங், உதவிஆணையர்கள் பிபின்குமார், சந்திரசேகரன், கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) ஏ.பிரகாஷ், மேற்பார்வையாளர் கே.ஆனந்தி, முதன்மை அதிகாரி சு.செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.