வணிகம்

மின்னஞ்சல் ஹேக்கிங் மூலம் தரவுகள் கசிவு: பேங்க் ஆஃப் பரோடா விளக்கம் என்ன?

மோகன் கணபதி

மும்பை: ‘வங்கி ஊழியர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக்கிங் மூலம் ஊடுருவப்பட்டு, அதன் வாயிலாக வங்கியின் சில தரவுகள் கசியவிடப்பட்டுள்ளன. ஆனாலும், வங்கியின் முக்கிய வங்கி அமைப்புகள் தொடர்ந்து பாதுகாப்பாகவே உள்ளன’ என்று பேங்க் ஆஃப் பரோடா விளக்கம் அளித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர் விவரங்கள், வங்கி ஆவணங்கள் ஆகியவை அடங்கிய 1 டெராபைட் அளவிலான தரவுகளை தான் கசியவிட்டதாக ஹேக்கர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அறிக்கையில், ‘பேங்க் ஆஃப் பரோடா வலுவான தகவல் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், ஒரு ஊழியரின் மின்னஞ்சல் கணக்கு ஊடுருவப்பட்டு, அதன் மூலம் சில தரவுகள் அனுமதியின்றி அணுகப்பட்டன.

இந்த விவகாரம் உடனடியாகக் கண்டறியப்பட்டு, உடனடித் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. வங்கியின் முக்கிய வங்கி அமைப்புகள் அணுகப்படவில்லை, மேலும் அவை தொடர்ந்து பாதுகாப்பாகவே உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான தடயவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பேங்க் ஆஃப் பரோடா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரு விரிவான தடயவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வங்கி நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

தகவல் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கும், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும் வங்கி தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது’ என்று பேங்க் ஆஃப் பரோடா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடாவின் ஒரு டெராபைட் அளவிலான ஆவணங்களை தான் கசியவிட்டதாக ஹேக்கர் ஒருவர் தெரிவித்த சில மணி நேரங்களில், வங்கித் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், ஆவணங்கள் திருடப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வங்கி விளக்கம் அளிக்கவில்லை.

மேலும், மின்னஞ்சல் கணக்கு எவ்வாறு ஊடுருவப்பட்டது என்பது குறித்தோ, எந்தெந்த தரவுகள் திருடப்பட்டன என்பது குறித்தோ வங்கி எவ்வித விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT