நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் களம் இறங்கியதைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற அந்தஸ்தை படைத்த நிலையில், நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்த ஒரே நாளில், மஸ்க்கின் சொத்து மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 14.71 விழுக்காடு உயர்ந்து, சுமார் 164.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13.8 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இந்த ஒரே ஒரு நாள் லாபம், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட (89.7 பில்லியன் டாலர்) இரு மடங்கு அதிகமாகும்.
அதே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 965 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இந்த இமாலய லாபத்தின் மூலம் எலான் மஸ்க்கின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தற்போது 1.3 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 4.15 ட்ரில்லியன் டாலராக உள்ள நிலையில், எலான் மஸ்க் என்ற ஒற்றை மனிதனின் சொத்து மதிப்பு மட்டும் இந்தியாவின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட கால் பங்கை (25%) நெருங்கியுள்ளது.
பல ஆண்டுகளாகத் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வர மறுத்து வந்த எலான் மஸ்க், சமீபத்தில் தனது எக்ஸ்.ஏஐ செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை இதனுடன் இணைத்த பிறகு ஐபிஓ வெளியிடச் சம்மதித்தார். இந்த ஐபிஓ மூலம் சந்தையில் 75 பில்லியன் டாலர் திரட்ட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலீட்டாளர்களின் அதீத வரவேற்பால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் நாளே 2.1 ட்ரில்லியன் டாலரைக் கடந்தது. ஐபிஓ வெளியீட்டிற்கு முன்பு 780 பில்லியன் டாலராக இருந்த மஸ்க்கின் சொத்து மதிப்பு, தற்போது 1.3 ட்ரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.