வணிகம்

EGR: பங்குச்சந்தை மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

போத்தி ராஜ்.க

தேசியப் பங்குச் சந்தையில் இதுவரை ஒரு நிறுவனத்தின் பங்குகளை மட்டும் வாங்கவோ விற்கவோ முடியும் நிலை இருந்தது. ஆனால், இனிமேல் பங்குகளைப் போன்று தங்கத்தையும் இஜிஆர் (EGR) முறையில் வாங்கும் முறையை தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

இஜிஆர் என்றால் என்ன?

இஜிஆர் என்பது மின்னணு தங்கம் ரசீது என்பதாகும். அதாவது, தங்கத்தை திடப்பொருளாக வாங்காமல், டிஜிட்டல் முறையில் தேசியப் பங்குச்சந்தையில் வாங்குவது. காகிதமில்லாத் தங்கம் என்றும் கூறுவர். தேசியப் பங்குச்சந்தையில் வாங்கும் இஜிஆர் ஒவ்வொன்றுக்கும் இணையான தங்கம், செபியால் அளிக்கப்பட்ட பாதுகாப்பான டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். இதைத் தேவைப்படும்போது, திடத் தங்கமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த முறையில் தங்கம் வாங்குவது மிகவும் வெளிப்படையானதும், பாதுகாப்பானதும் ஆகும். தரத்தையும் நிலைப்படுத்தலாம். தேவைற்ற செலவுகளைத் தவிர்க்க முடியும். டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கி எப்போது வேண்டுமானாலும், அதை திடத் தங்கமாக மாற்றிக் கொள்ள முடியும். இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதாகும்.

எப்போது இஜிஆர் திட்டம் தொடங்கப்பட்டது?

பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி, இஜிஆர் திட்டத்துக்கான வரைவு விதிகளை உருவாக்க ஒப்புதல் அளித்தது. 2022, ஏப்ரல் 11-ம் தேதி, இஜிஆர் குறித்த விரிவான இடர் மேலாண்மை கட்டமைப்பு குறித்த விதிகளை செபி வெளியிட்டு, இஜிஆர் விற்பனைக்கு வரைவு ஒப்புதல் அளித்து, 2022 செப்டம்பர் மாதம் இறுதி ஒப்புதல் அளித்தது.

இதன்படி 2022, அக்டோபர் 24-ம் தேதி மும்பை பங்குச்சந்தையில் முகூர்த்த வர்த்தகத்தில் முதல் இஜிஆர் விற்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை 995 மற்றும் 999 சுத்த தரத்தில் தங்கத்துக்கான மின்னணு ரசீதுகளை ஒரு கிராம், 10 கிராம், 100 கிராம், ஒரு கிலோ என்ற அடிப்படையில் விற்பனையைத் தொடங்கியது. தேசியப் பங்குச்சந்தை 2026 மே 4-ம் தேதி தங்க இஜிஆர் விற்பனையை முறைப்படி பங்குசந்தையில் தொடங்கியது.

எத்தனை கிராமில் தங்கம் கிடைக்கும்?

தேசியப் பங்குச்சந்தையில் 99.5% மற்றும் 99.9% சுத்தமான தரத்தில் தங்கத்தை வாங்க முடியும். டிஜிட்டல் முறையில் விற்கப்படும் தங்கம், 1 மில்லி கிராம், 10 மில்லி கிராம், ஒரு கிராம், 10 கிராம், 100 கிராம் மற்றும் ஒரு கிலோ அளவில் விற்கப்படுகிறது. ஒரு சிறிய முதலீட்டின் மூலம் இந்த இஜிஆர் திட்டத்தை பரிசோதிக்க விரும்பினாலும் அல்லது காலப்போக்கில் முதலீட்டைச் சேர்த்து வளர்க்க விரும்பினாலும், முதல்முறை வாங்குபவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இஜிஆர் கிடைக்கின்றன.

இஜிஆர் தங்கத்தை வாங்குவது, விற்பது எப்படி?

இஜிஆர் தங்கத்தை தேசியப் பங்குச்சந்தையின் வர்த்தக நேரத்தில் வாங்கவும் முடியும், விற்கவும் முடியும். திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் காலை 9 மணி முதல் இரவு 11.30 மணி அல்லது இரவு 11.55 வரை வர்த்தகத்தில் இஜிஆர் வாங்கலாம், விற்கலாம். அமெரிக்காவில் பகலிரவு நேரத்துக்காக இரவு வரை நீட்டிக்கப்படுகிறது.

பங்குகளைப் போன்று இஜிஆர் வாங்கியவுடன், மறுநாள் வர்த்தகத்தின்போது, டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். சில்லறை முதலீட்டாளர்கள், நகை வியாபாரிகள், தங்கம் விற்பனையாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள், தகுதிவாய்ந்த சந்தை முதலீட்டாளர்கள் இஜிஆர் தங்கத்தை பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகர்களிடம் வாங்கலாம். இஜிஆர் தங்கம் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு கண்டிப்பாக டிமேட் கணக்கு அவசியம். இதை விற்கவும் டிமேட் கணக்கு அவசியம்.

நடைமுறைகள் என்னென்ன? இஜிஆர் வங்கும்போது கட்டணம் செலுத்த வேண்டுமா?

ஆமாம். இஜிஆர் முறையில் தங்கம் வாங்கும்போது கட்டணம் செலுத்த வேண்டும்.

1. இஜிஆர் முறையில் தங்கத்தை பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகரிடம் வாங்கும்போது, அதற்கான புரோக்கரேஜ் கட்டணம் செலுத்த வேண்டும்.

2. நம்முடைய டிமேட் கணக்கில் இஜிஆர் தங்கத்தை டிஜிட்டல் முறையில் டெபாசிட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.

3. டிமேட் கணக்கில் டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேமித்து வைக்க வால்ட் மேலாளர் சிறிய கட்டணத்தை விதிப்பார்.

4. இஜிஆர் தங்கத்தை திடத் தங்கமாக மாற்றும்போது, அந்தத் தங்கத்தின் தரத்தை பரிசோதிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை தங்கத்தின் அளவு அதிகமாக இருந்தால், பாதுகாப்புடன் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.

5. திடத் தங்கமாக மாற்றி எடுத்துச் செல்லும்போது மதிப்பில் 3% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

திடத் தங்கமாக மாற்ற முடியுமா?

நிச்சயமாக மாற்ற முடியும். இஜிஆர் முறையில் தங்கத்தை வாங்கி, டிமேட் கணக்கில் சேமித்து வைத்து, நமக்குத் தேவைப்படும்போது, அதை திடத் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக தங்கத்தை திடமாக மாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் கொடுக்க வேண்டும்.

இது தேசிய பங்குச்சந்தையின் மேலாளருக்கு அனுப்பப்பட்டு, தேவையான தங்கம் கொண்டுவரப்பட்டு 3 நாட்களுக்குள் திடத் தங்கத்தை பெறலாம். என்எஸ்இ அமைப்பு வழங்கிய தங்கத்தின் தரத்தை பரிசோதிக்க விரும்பினால், அதற்கு தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க வேண்டும். தங்கத்தை நம்மிடம் வழங்கும் முன் தரப் பரிசோதனை செய்து எத்தனை சதவீதம் பரிசுத்தமானது என்ற சான்றும், அதற்குரிய கட்டணமும் வசூலிப்பார்கள்.

இஜிஆர் முதலீடு: பலன் என்ன?

செபியின் கட்டுப்பாட்டில் இஜிஆர் வருவதால் முதலீடு பாதுகாப்பானது. இதை, டிஜிட்டல் முறையில் வாங்கி முதலீடு செய்து, நமது தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் திடத் தங்கமாக மாற்றலாம்.

நாம் வாங்கும் ஒவ்வொரு இஜிஆர் தங்கத்திலும் அதன் தரம், எவ்வளவு பரிசுத்தமானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இஜிஆர் தங்கம் மிகவும் பாதுகாப்பாக செபியின் வரைமுறைப்படுத்தப்பட்ட வால்ட்களில் சேர்க்கப்படும்.

குறிப்பாக தங்கத்தின் தரம், தூய்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை. பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற அச்சமும் வேண்டாம். தங்கத்தை வாங்க வெளிப்படையான மற்றும் தரப்படுத்தப்பட்ட வழியாக இருக்கிறது.

இஜிஆர் பரிவர்த்தனை வர்த்தகத்தில் வெளிப்படையான விலையே கடைபிடிக்கப்படும். நாடு முழுவதும் இஜிஆர் தங்கத்துக்கு ஒரே விலை என்பது உறுதியானது. பங்குச்சந்தையின் சந்தை நேரங்களில் முதலீட்டாளர்கள் இஜிஆர் தங்கத்தை வாங்கவும், விற்கவும் முடியும். அவற்றை ஒரு டிமேட் கணக்கில் வைக்க முடியும்.

இஜிஆர் தங்கத்தை சந்தை நேரத்தில் வாங்கும்போது ஜிஎஸ்டி வரி செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், திடத் தங்கமாக மாற்றி எடுத்துச்செல்லும்போது அதன் மதிப்பில் 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதிருக்கும்.

எப்படி லாபம் ஈட்டுவது?

பங்குச்சந்தையில் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிகரிக்கும்போது விற்பதைப் போல், தங்கத்தையும் அதேபோல் விற்கலாம். 12 மாதங்களுக்குள் இஜிஆர் தங்கத்தை விற்று முதலீட்டிலிருந்து லாபம் ஈட்டினால், அதற்கு முதலீட்டு ஆதாய வரி இல்லை. அதுவே, 12 மாதங்கள் வைத்திருந்து அதன்பின் விற்பனை செய்து லாபம் ஈட்டினால் 12.5% வரி செலுத்த வேண்டியதிருக்கும்.

SCROLL FOR NEXT