வணிகம்

எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: மின்சார அடுப்பு விற்பனை உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: மேற்கு ஆசியப் போர் சூழலால் நாடு முழுவதும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் வணிக தளங்களில் மின்சார அடுப்புகளின் (இன்டக்சன் ஸ்டவ்) விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 4- 5 நாட்களில் மட்டும் மின் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்கான தேவை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதேபோல் அமேசான் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விற்பனை 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

இது குறித்து வர்த்தகர்கள் கூறுகையில், "எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாகப் பொதுமக்கள் மாற்று வழியைத் தேட தொடங்கியுள்ளனர். அதன் காரணமாகவே இன்டக்சன் அடுப்புகளுக்கான தேவை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதாவது முன்பு வாரத்திற்கு 2 அல்லது 3 அடுப்புகள் மட்டுமே விற்று வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. உணவக உரிமையாளர்களும் தற்போது வணிக ரீதியிலான பெரிய இண்டக்சன் அடுப்புகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து எரிவாயு பற்றாக்குறை நிலை நீடித்தால், மின்சார அடுப்புகளுக்கும் இறுதியில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும்" என்றனர்.

SCROLL FOR NEXT