நாமக்கல்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாமக்கல் பகுதியில் முட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்படும் என்று கோழிப்பண்ணையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம், கேரளாவுக்கு முட்டை அனுப்புவதில் பாதிப்பு இல்லை என்று முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர்தெரிவித்துள்ளார்.
நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், கோவை, திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் சுமார் 2,000 முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை வெளிநாடுகளுக்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கேரள மாநிலத்துக்கு தினமும் 1 கோடி முட்டைகள் செல்கின்றன. தற்போது நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை யடுத்து, நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 கி.மீ. சுற்றளவுக்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், அங்கிருந்து வாத்துகள், கோழிகள், முட்டைகள், காடை மற்றும் பிற பறவைகள் உள்ளிட்டவை வாங்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாமக்கல் பகுதியில் உற்பத்தியாகும் முட்டைகள் தேங்கும் அபாயம் உள்ள தால், கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.ஆனந்தன் கூறும்போது, “கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், நாமக்கல்லிலிருந்து கேரளாவுக்கு முட்டைகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
தற்போது முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை அனுப்புவதில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நிறைவடைந்தால், முட்டையின் தேவை குறையும்” என்றார்.