புதுடெல்லி: தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் அரிய வகை தாதுக்களை பிரித்தெடுத்து, சுத்திகரித்து எடுத்துச் செல்லும் விதமாக தனி வழித்தடம் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் வகையில் பிரத்யேக வழித்தடங்கள் (Dedicated Rare Earth Corridors) அமைக்கப்பட உள்ளன. கடற்கரை ஓரங்களில் அதிகப்படியான கனிம மணல் இருப்பு கொண்ட தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதன் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
தற்போது அரிய வகை தாதுக்களுக்கு சீனா போன்ற நாடுகளை அதிகம் நம்பியிருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே அரிய வகை தாதுக்களை பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க இத்திட்டம் வகை செய்யும்.
இதற்காக ரூ.7,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் மூலம் தயாரிக்கப்படும் அரியவகை காந்தங்கள், கனிமங்கள் ஆகியவை மின்சார வாகனங்கள், விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு உபகரணங்கள், காற்றாலை மின் உற்பத்திக்கு முதுகெலும்பாக அமையும்.
50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்: இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம் சுமார் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதில் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும், அரிய வகை தாதுக்களுக்கான தனி இயக்கத்தை (Rare Earth Critical Minerals Mission) உருவாக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.