கிரெட் நிறுவனர் குணால் ஷா

 
வணிகம்

வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு

டெக்ஸ்டர்

புதுடெல்லி: இந்தியாவின் பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட்  நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் செயலியின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் நிறுவனத்தை வழிநடத்தி வந்த வில் கேத்கார்ட்டுக்குப் பதிலாக குணால் ஷா இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார் என வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குணால் ஷாவின் இந்த உலகளாவிய நியமனத்தின் ஒரு பகுதியாக, மெட்டா நிறுவனம் கிரெட் நிறுவனத்தில் சுமார் 900 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,550 கோடி) முதலீடு செய்யவுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் மெட்டா நிறுவனம் கிரெட்டின் சிறுபான்மை பங்குதாரராக இணைகிறது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, குணால் ஷா கிரெட் நிறுவனத்தின் தினசரி செயல்பாட்டு தலைமைப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுகிறார்.

அவருக்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் நிதித்துறைத் தலைவராக இருக்கும் மிதென் சம்பத் இடைக்கால சிஇஓ-வாகப் பொறுப்பேற்கிறார். இருப்பினும், குணால் ஷா கிரெட் நிறுவனத்தின் தனிப்பட்ட பங்குகளையும், முக்கியப் பங்குதாரர் என்ற தகுதியையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வார்.

இந்த நியமனம் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக கிரெட்டை குணால் ஷா கட்டியெழுப்பியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய செய்திப் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப்பை வழிநடத்துவதற்குத் தேவையான உலகளாவிய தொலைநோக்குப் பார்வையும், உன்னதமான உழைப்பும் அவரிடம் உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் மற்றும் லட்சக்கணக்கான வணிகங்களுக்கு வாட்ஸ்அப் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்ய குணால் ஷாவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்துப் பேசிய குணால் ஷா, வாட்ஸ்அப்பின் தற்போதைய நிலைகளுக்கும் அதன் முழுமையான ஆற்றலுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகப்பெரியது என்றும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறினார். மேலும், மெட்டா நிறுவனத்தின் இந்த முதலீடு ஒரு நிதி முதலீடே தவிர, இதனால் கிரெட் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும், வாட்ஸ்அப் நிர்வாகத்திற்குப் பயனர்களின் தரவுகளை அணுகும் அதிகாரம் வழங்கப்படாது என்றும் அவர் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 1 மில்லியன் டாலர் சொந்த முதலீட்டில் தொடங்கப்பட்டு, இன்று 1.7 கோடி பயனர்களுடன் ரூ.3,200 கோடி வருவாய் ஈட்டும் லாபகரமான நிறுவனமாக வளர்ந்துள்ள கிரெட்டின் பின்னணியில் உள்ள குணால் ஷா, இனி உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பின் வணிகம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை தீர்மானிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT