வணிகம்

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி முதலீட்டில் கோவை - ஈரோடு - திருப்பூர் நகரங்களை உள்ளடக்கிய பொருளாதார பிராந்தியம்!

மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான மத்​திய பட்ஜெட்டை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மக்​களவை​யில் நேற்று முன்​தினம் தாக்​கல் செய்​தார். இதில் நகர பொருளா​தார பிராந்​தி​யம் என்ற சிறப்பு திட்​டம் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்படி நாடு முழு​வதும் 7 இடங்​களில் நகர பொருளா​தார பிராந்தி​யங்​கள் (சிஇஆர்) அமைக்​கப்பட உள்​ளன.

தமிழ்​நாட்​டில் கோவை- ஈரோடு- திருப்​பூர் ஆகிய 3 நகரங்​களை உள்​ளடக்​கிய நகர பொருளா​தார பிராந்​தி​யம் உரு​வாக்​கப்பட உள்ளது. இதே​போல ஒடி​சா​வில் புவனேஸ்​வர்- புரி - கட்​டாக் ஆகிய 3 நகரங்​களை உள்​ளடக்​கிய சிஇஆர் திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

          

இவை தவிர கர்​நாடக தலைநகர் பெங்​களூரு, ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம், மகா​ராஷ்டி​ரா​வின் புனே, குஜ​ராத்​தின் சூரத், உத்​தர பிரதேசத்​தின் வாராணசி ஆகிய நகரங்​களி​லும் நகர பொருளா​தார பிராந்​தி​யம் உரு​வாக்​கப்பட உள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பட்ஜெட் உரை​யில் கூறிய​தாவது: நாடு முழு​வதும் 7 இடங்​களில் சிஇஆர் திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதன் மூலம் அந்த பிராந்​தி​யங்​களில் தொழில் வளர்ச்சி மேம்​படும். புதி​தாக குறு, சிறு ஆலைகள் உரு​வாக்​கப்​படும்.

மிக நீண்ட கால அடிப்​படை​யில் தொழில் திட்​டங்​கள் செயல்படுத்தப்​படும். வளர்ச்​சி, புதுமை கண்​டு​பிடிப்​பு​கள், புதிய வாய்ப்​பு​கள் ஆகிய 3 இலக்​கு​களை அடிப்​படை​யாகக் கொண்டு சிஇஆர் திட்​டம் அமல்படுத்தப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

மத்​திய நிதி​யமைச்சக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நகர பொருளா​தார பிராந்​தி​யம் திட்​டத்​தின் (சிஇஆர்) கீழ் தமிழகம், கர்​நாட​கா, ஆந்​தி​ரா, மகா​ராஷ்டி​ரா, ஒடி​சா, குஜ​ராத், உத்தர பிரதேச மாநிலங்​களின் நகரங்​களில் மிகப்​பெரிய தொழில் புரட்சி ஏற்படுத்​தப்​படும். அடுத்த 5 ஆண்​டு​களில் ஒவ்​வொரு சிஇஆர் பிராந்​தி​யத்​தி​லும் தலா ரூ.5,000 கோடி முதலீடு செய்​யப்​படும். இந்த திட்​டத்​தால் தமிழகம் உள்​ளிட்ட 7 மாநிலங்​களும் அபார வளர்ச்சி அடை​யும். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT