விருதுநகரில் டைடல் பூங்கா கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட இடம்.
விருதுநகர்: விருதுநகரில் அடிக்கல் நாட்டப்பட்டு 5 மாதங்களாகியும் டைடல் பூங்கா பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தென்மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் வகையிலும், படித்த இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கிலும் விருதுநகரில் மினி டைடல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவக் கல்லூரி அருகே, மினி டைடல் பூங்கா கட்டுவதற்கான பணிகளை, கடந்த பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதற்காக 4 ஏக்கர் பரப்பளவில் 61 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 3 மாடி கட்டிடத்துடன் மினி டைடல் பூங்கா கட்ட ரூ. 38.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணிக்கம்தாகர் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தனர்.
கட்டுமானப் பணிகள் 16 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு 5 மாதங்களாகியும் இதுவரை கிராவல் மண் கொட்டி இடத்தை சமப்படுத்தும் பணியோடு கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து டைடல் பூங்கா கட்டுமானப் பொறியாளர்கள் கூறுகையில், கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதால், கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மேலும், கட்டிடத்தின் முகப்பு வடிவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், அதுவரை விருதுநகர் மட்டுமின்றி தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற டைடல் பூங்கா திட்டங்களையும் அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.