வணிகம்

இந்​தி​யா​வின் மின்​னணு சாதன தயாரிப்பு கனவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனாவின் கட்டுப்பாடுகள்!

மத்​திய அரசின் உதவியை நாடிய உள்​நாட்டு நிறுவனங்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகளா​விய மின்​னணு சாதன உற்​பத்தி மைய​மாக மாற நினைக்​கும் இந்​தி​யா​வின் லட்​சி​யத்​துக்​கு, சீனா​வின் புதிய விநி​யோகச் சங்​கிலி கட்​டுப்​பாடு​கள் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனால் தொழில் துறை​யினர் மத்​திய அரசின் ஆதர​வைக் கோரி​யுள்​ளனர்.

சீனா, தனது நாட்​டின் விநி​யோகச் சங்​கிலி மீதான கட்​டுப்​பாட்டை வலுப்​படுத்​த​வும், அதைப் பாது​காக்​க​வும் கடந்த ஏப்​ரல் மாதம் புதிய கட்​டுப்​பாடு​களை அறி​முகப்​படுத்​தி​யது. இதற்​காக சீனா கொண்டு வந்​துள்ள ‘834 மற்​றும் 835’ ஆகிய இரண்டு புதிய அரசாணை​கள், இந்​திய உற்​பத்​தித் துறையை நேரடி​யாகப் பாதிக்கும் என நிபுணர்​கள் எச்​சரிக்​கின்​றனர்.

இந்த புதிய விதி​கள் மூலம், சீனா​வில் இருந்து தங்​களது விநியோகச் சங்​கி​லியை இந்​தி​யா​வுக்கு மாற்​றிய அல்​லது மாற்றத் திட்ட​மிடும் ஆப்​பிள் போன்ற உலகளா​விய முன்​னணி நிறு​வனங்​களின் முடிவு​களில் தலை​யிட​வும், அவற்றை தன்னிச்சை​யாக முடக்​க​வும் சீனக் கட்​டுப்​பாட்​டாளர்​களுக்கு கூடுதல் அதி​காரம் கிடைத்​துள்​ளது.

சீனா​வின் இந்த புதிய விதி​முறை​கள், மின்​னணு சாதன தயாரிப்புப் பரவலாக்​கல் உத்​தி​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் கார்ப்பரேட் நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​கள் மீது தனி​நபர் தடைகளை விதிக்​க​வும் வழி​வகை செய்​கிறது. அதாவது, இந்தியாவில் புதிய உற்​பத்தி ஆலைகளைத் தொடங்க அனுமதிக்கும் அதி​காரி​கள் மீது சீனா அபராத நடவடிக்கை அல்லது தண்​டனை​களை விதிக்க முடி​யும். இது உலகளா​விய முதலீட்​டாளர்​கள் மத்​தி​யில் கடும் அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​தி​யா​வில் உள்​நாட்டு விநி​யோகச் சங்​கி​லியை மேம்​படுத்​த​வும், வெளி​நாட்​டுச் சார்​பைக் குறைக்​க​வும் மத்​திய அரசு பல்​வேறு முயற்​சிகளை எடுத்து வந்​தா​லும், மின்​னணு உதிரி​பாகங்​கள், அசெம்​பிளி​கள் மற்​றும் உற்​பத்தி உபகரணங்​களுக்கு இன்​ன​மும் இந்​திய நிறு​வனங்​கள் சீனாவையே பெரு​மள​வில் சார்ந்​துள்​ளன. இதனால், சீனா​வின் புதிய கட்​டுப்​பாடு​கள் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி வளர்ச்சி மற்​றும் எதிர்​கால முதலீடு​களை முடக்​கும் அபா​யத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

உலகளா​விய நிறு​வனங்​கள் இந்​தி​யா​வின் ‘சீ​னா + 1’ உத்​தி​யின் கீழ் முதலீடு செய்​வதை எளி​தாக்க, சமீபத்​தில் ​தான் இந்​தியா தனது ‘பிரஸ் நோட் 3’ கட்​டுப்​பாடு​களைத் தளர்த்​தி​யது. இதனால் இந்​தி​யா​வுக்கு உற்​பத்தி சந்தை கைமாறி​விடக் கூடாது என்ற நோக்​கிலேயே சீனா இந்த தந்​திர​மான நடவடிக்​கையை எடுத்துள்ள​தாகத் துறை சார்ந்த வல்​லுநர்​கள் குற்​றம் சாட்டுகின்றனர்.

இந்த விவ​காரத்​தின் தீவிரத்​தன்​மை​யைக் கருத்​தில் கொண்​டு, “நிலை​மையை அரசு உன்​னிப்​பாகக் கவனித்து வரு​கிறது. இது குறித்து பல்​வேறு அமைச்​சகங்​களு​டன் கலந்​தாலோ​சித்​து, தொழில் துறை​யினருக்​குத் தேவை​யான சிறந்​த உதவி​கள்​ செய்யப்​படும்​” என்​று அரசு அதி​காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT