கோப்புப்படம்
சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் 2-ம் கட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட நிலையங்களும் இடம்பெறவுள்ளன.
இத்தடத்தில் ரயில்கள் மாறிச் செல்வதற்கான வசதிகள் 6 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, ராயப்பேட்டை பகுதியில் அமையும் ‘கிராஸ் ஓவர் டிராக்’ எனப்படும் மெட்ரோ ரயில்கள் மாறி செல்லும் பாதை பணிகளை ஆர்.வி.என்.எல். மற்றும் யூ.ஆர்.சி. நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது, ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு, ‘கிராஸ் ஓவர் டிராக்’ எனப்படும் மெட்ரோ ரயில்கள் மாறிச் செல்லும் வகையில் பாதையில் கட்டமைப்பு வசதி மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்களை அதிகரித்து இயக்கவும், ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும்போது, அடுத்தடுத்து பாதிப்பு இன்றி இயக்கவும் ‘கிராஸ் ஓவர் டிராக்’ அவசியமானது.
மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் ராயப்பேட்டை, புரசைவாக்கம், அடையாறு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி என 6 இடங்களில் கிராஸ் ஓவர் டிராக் அமைக்கப்படுகிறது என்றனர்.