புது டெல்லி: யுபிஐ வழியாக ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் 0.4% கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்தக் கட்டணங்கள் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளையில், இந்தக் கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
'வணிகர் தள்ளுபடி விகிதம்' (MDR) என்று அழைக்கப்படும் இந்தக் கட்டணம், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வணிகருக்கு ரூ.75,000 அல்லது அதற்கும் அதிகமான தொகை யுபிஐ மூலம் செலுத்தப்பட்டாலும், அதற்கான கட்டணம் ரூ.300-க்கு மிகாது என இந்திய தேசிய கட்டணக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டணங்கள் 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரையிலான கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்படும்.
இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாத குறிப்பிட்ட மின்னணு கட்டண முறைகளை அறிவிக்க ஏதுவாக, அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு பணப் பரிவர்த்தனைகள், தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ல் திருத்தம் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், குறைந்த கட்டணம், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ அடித்தளத்தை வழங்குகிறது.
14 செப்டம்பர் 2026 அன்று, மத்திய அரசு இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ரூ 2,000 வரையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு 'வணிகர் தள்ளுபடி விகிதம்' ஏதும் விதிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செயல்பாட்டு அளவுகோல், கட்டணப் பகிர்வு மாதிரிகள், வகை வாரியான வரம்புகள் குறித்து, யுபிஐ வழிகாட்டுதல் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்திய தேசிய கட்டணக் கழகம், 15 செப்டம்பர் 2026 அன்று விரிவான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்தச் சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
தனி நபர்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, பரிவர்த்தனை மதிப்பைச் சாராமல் எவ்விதக் கட்டணமும் இருக்காது. மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில், எண்ணிக்கையின் அடிப்படையில் தனிநபர் பரிவர்த்தனைகள் 37% ஆகவும், மதிப்பின் அடிப்படையில் 70% ஆகவும் உள்ளன.
ரூ 2,000-க்கும் அதிக மதிப்புள்ள தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும். ரூ 2,000-க்கும் மேற்பட்ட தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% என்ற பெயரளவு கட்டணம் விதிக்கப்படும்.
ரூ 75,000, அதற்கு மேற்பட்ட அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு, தலா ரூ 300 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் , விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசியமான துறைகளில் மேற்கொள்ளப்படும் ரூ 2,000-க்கும் மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.5 என்ற நிலையான கட்டணம் விதிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேசிய கட்டணக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், "டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான சிறிய அளவிலான கட்டணங்களை வணிகர்களே ஏற்றுக்கொள்வது என்பது வழக்கமான செயல்பாட்டுச் செலவுகளாகவே கருதப்படுகின்றன.
இவை கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சராசரி விற்பனை மதிப்பு உயர்வு மற்றும் ரொக்கப் பணத்தைக் கையாள்வதில் உள்ள அபாயங்கள் குறைதல் ஆகியவற்றின் மூலம் ஈடுசெய்யப்படுகின்றன. எனவே, நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குக் குறிப்பிடப்பட்ட அதே விலையையே தொடர்ந்து செலுத்துவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.