புதுடெல்லி: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை பெருமளவில் ஊக்குவிக்கும் நோக்கில், அவற்றின் முக்கிய மூலப்பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
குறிப்பாக, டிஸ்ப்ளே திரைகள், லித்தியம் அயன் பேட்டரி செல்கள் மற்றும் கம்பியில்லா சார்ஜிங் தொழில்நுட்ப பாகங்கள் தயாரிப்புக்கான உற்பத்திச் செலவு குறைந்து உள்நாட்டு மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பு பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் இந்த வரி விலக்கு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த வரி விலக்கு சலுகையானது, உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சுங்க வரி நீக்கத்தின் மூலம், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியுடன் கூடிய வலுவான மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும் என்று அரசு நம்புகிறது.
டிஸ்ப்ளே திரைகள் மற்றும் கம்பியில்லா சார்ஜிங் தொழில்நுட்பத்திற்குப் பயன்படும் மின்சுருள் தொகுப்பு போன்றவைகளின் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வரி விலக்கு சலுகையானது வரும் 2029-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஏஎம்ஆர்ஜி குளோபல் நிறுவனத்தின் மேலாண்மைப் பங்குதாரர் ரஜத் மோகன் கூறுகையில், மொபைல் மற்றும் மின்சார வாகன பேட்டரி தயாரிப்பு இயந்திரங்களுக்கு இதுவரை தனித்தனியாக இருந்த சுங்க வரி விலக்குகளை அரசு தற்போது ஒன்றாக இணைத்துள்ளது. தொழில்நுட்ப வேறுபாடின்றி அனைத்து வகையான ‘லித்தியம் அயன் செல்கள்’ தயாரிக்கும் இயந்திரங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த ஒற்றை வரி விலக்கு முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய மாற்றம் சுங்க வரி விதிப்பு முறையை எளிமையாக்குவதுடன், இறுதிப் பயன்பாடு சார்ந்த குழப்பங்களை நீக்கி, உற்பத்தியாளர்களின் விதிமுறை இணக்கச் சுமையையும், சட்ட விளக்கக் குழப்பங்களையும் கணிசமாகக் குறைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த திருத்தம் உள்நாட்டு லித்தியம் அயன் செல் தயாரிப்பில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் என்றும், ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகளைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பெரிய இணக்கமான சூழல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பிரம்மாண்ட பேட்டரி உற்பத்தி ஆலைகள், மின்சார வாகன உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மின்னணு நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பெரும் பயனடைவார்கள் என்றும் ரஜத் மோகன் கூறினார்.