மும்பை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று காலை பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன.
30 பங்குகளைக் கொண்ட BSE சென்செக்ஸ் வர்த்தக ஆரம்பத்தில் 2,743.46 புள்ளிகள் அல்லது 3.37 சதவீதம் சரிந்து 78,543.73 ஆக குறைந்தது. 50 பங்குகளைக் கொண்ட NSE நிஃப்டி 533.55 புள்ளிகள் அல்லது 2.11 சதவீதம் சரிந்து 24,645.10 ஆக குறைந்தது.
பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 1,628.84 சரிந்து 79,658.35 ஆகவும், நிஃப்டி 503.55 புள்ளிகள் சரிந்து 24,675.10 ஆகவும் இருந்தது.
இண்டர்குளோப் ஏவியேஷன், லார்சன் & டூப்ரோ, ஈட்டர்னல், அதானி போர்ட்ஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவை மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன. பாரத் எலெக்ட்ரானிக்ஸின் பங்குகள் மட்டும் உயர்ந்தது.
சர்வதேச எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.38 சதவீதம் குறைந்து, பேரல் ஒன்றுக்கு 76.79 அமெரிக்க டாலராக இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில், ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில், ஷாங்காயின் SSE வர்த்தகம் உயர்வைச் சந்தித்தது.
சந்தை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜியோஜித் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு நிபுணர் வி.கே. விஜயகுமார், “மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் குறுகிய காலத்தில் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிசக்தி துறை அபாயத்தை எதிர்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) வெள்ளிக்கிழமை ரூ.7,536.36 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றனர். அதேநேரத்தில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) ரூ.12,292.81 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.
“முதலீட்டாளர்களுக்கு எரிசக்தித் துறையைத் தாண்டியும் அபாயங்கள் உள்ளன. பிராந்தியத்தில் நீடித்த நிலையற்ற தன்மை வர்த்தக வழிகளை பாதிக்கலாம், விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கலாம். பணவீக்கம் மீண்டும் அதிகரித்தால் அது உலகளவில் நிதி நிலைமையை கடுமையாக்கலாம்,” என்று ஆன்லைன் வர்த்தக மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனமான என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொன்முடி தெரிவித்துள்ளார்.