புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிற்காமல், வேகத்தடை இன்றி கடந்து செல்ல உதவும் பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை, குஜராத்தில் உள்ள பரூச் சுங்கச் சாவடியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நகர்ப்புற விரிவாக்கச் சாலை 2 -ல் அமைந்துள்ள முண்ட்கா-பக்கர்வாலா சுங்கச்சாவடியில் 'பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல்' முறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "இந்த எம்எல்எப்எப் அமைப்பு சுங்கக் கட்டணத்தை தானாகவே வசூலிப்பது மட்டுமல்லாமல், சீட்-பெல்ட் அணியாமல் இருத்தல், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுதல் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களுக்கு சலான்களை வழங்கவும் உதவும். இந்த அமைப்பு காலப்போக்கில் பரந்த அளவிலான போக்குவரத்து அமலாக்கத் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்" என்றார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், “இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள், நாடு முழுவதும் சுமார் 1,300 சுங்கச்சாவடிகளில் இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது’’ என்றார்.