ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் மூங்கில் கூடை முடைதல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

 
வணிகம்

மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழில் நலிந்து வருவது ஏன்?

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் மூங்கில் மரத்தட்டுப்பாடு காரணமாக மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழில் நலிந்து வருகிறது. இத்தொழிலை நம்பியுள்ளவர் களின் வாழ்வாதாரத்தைக் காக்க வனத்துறை மூலம் குறைந்த விலையில் மூங்கில் மரங்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் மலைக் கிராமங்களில் மூங்கில் மரத்தை அடிப்படையாக கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் பல குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

          

இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட இப்பகுதி மக்கள் ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து இடைத்தரகர்கள் மூலம் மூங்கிலை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இப்பகுதி மக்கள் மூங்கில் கூடை, முறம், சாதம் வடிக்க பயன்படும் பெட்டி, கோழிக்கூடு, பூஜைப் பொருட்கள், பிரம்பு நாற்காலி, ஊஞ்சல் மற்றும் வீடுகளை அலங்கரிக்கும் கைவினைப் பொருட்களை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த கெடுதலும் இல்லாத மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பல தலைமுறையாக மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நாகரிக மாற்றத்தால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மூங்கில் பொருட்களின் பயன்பாட்டை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

மேலும், மூங்கில் மரங்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதனால், இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் விலை கொடுத்து மூங்கிலை கொள்முதல் செய்து பொருட்களை தயாரித்து வருகிறோம். பல நேரங்களில் மூங்கில் மரம் வைத்திருப்பதால், வனத்துறை மற்றும் காவல் துறையினர் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர்.

இதனால், பலர் இத்தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஓசூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்ட நிலையில், தற்போது, 20 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலை கைவிட மனம் இல்லாமல் செய்து வருகிறோம். வரும் காலங்களில் இந்தத் தொழில் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது.

வெளிநாடுகளில் மூங்கில் கைவினைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் ஆகிய பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மூங்கில் காடுகள் உள்ளன. இங்குள்ள மூங்கில் மரங்கள் காய்ந்து வீணாகி வருகின்றன.

மேலும், கோடை காலங்களில் காய்ந்த மூங்கில் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பற்றி காட்டுத் தீ ஏற்பட்டு அழிந்து வீணாகிறது. வனத்துறையினர் காய்ந்த மூங்கில் மரங்களை குறைந்த விலைக்கு எங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால், இத்தொழிலை தொடர முடியும்.

இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். இத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவும், வங்கிக் கடன் உதவிகள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT