சென்னை: தென்னிந்தியாவின் ஆட்டோமேஷன் தலைநகர் என்று அழைக்கப்படும் சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜோதி ஜோசப் கூறியதாவது: தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது அரசின் இலக்காக உள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் “ஆட்டோமேஷன் எக்ஸ்போ 2026” சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மார்ச் 12 முதல் 14 வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் நவீன தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. இந்த வாய்ப்பை தென்னிந்திய தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தொழில்துறை கொள்முதல் அதிகாரிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்தங்களை உறுதி செய்ய ‘டீல் ரூம்’ (Deal Room) என்ற பிரத்யேக வசதியும், எதிர்கால பொறியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளும் இதில் இடம்பெற உள்ளன.
இந்தியாவின் உற்பத்தித் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இக்கண்காட்சி, தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஜோதி ஜோசப் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்