ஏதர் கோனார்க் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் மேத்தா (வலது).
பெங்களூரு: ஏதர் நிறுவனம், தனது அடுத்த தலைமுறை மின்சார ஸ்கூட்டரான ‘கோனார்க்’ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு, ஏதர் கோனார்க் ஸ்கூட்டர் ரூ. 99,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற அதிரடி ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது S மற்றும் Z என இரண்டு பிரிவுகளில், மொத்தம் 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. கோனார்க் S-ன் 125 கி.மீ மற்றும் 161 கி.மீ மாடல்கள் செப்டம்பரில் விற்பனைக்கு வரும். கோனார்க் S 100 கி.மீ மற்றும் 200 கி.மீ, Z 125 கி.மீ மற்றும் 161 கி.மீ மாடல்கள் 2027-ல் சந்தைக்கு வரவுள்ளன.
இந்த ஸ்கூட்டரின் உச்சபட்ச மாடல் ‘S 200’-ஐ ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இந்தியாவில் முதல் முறையாக, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 5-ம் தலைமுறை ‘பெட்ராக்’ பேட்டரி பிளாட்ஃபார்முக்கு 10 ஆண்டுகள் அல்லது 1,00,000 கி.மீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
மேலும், ‘மேஜிக் கீ’ என்ற புதிய தொழில்நுட்பம் மூலம் சாவியே இல்லாமல் ஸ்கூட்டரை இயக்கும் வசதியை ஏதர் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர் அருகில் சென்றால் ஸ்கூட்டர் தானாகவே அன்லாக் ஆகும்; இறங்கிச் சென்றால் லாக் ஆகிவிடும்.
அறிமுக விழாவில் ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் மேத்தா பேசுகையில், ‘இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களை பிரதானமானதாக மாற்றும் வகையில் கோனார்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனத்துக்கு மாறக் காத்திருக்கும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ப கோனார்க்கை உருவாக்கியுள்ளோம்” என்றார்.