மங்களூரு: ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் மங்களூரு துறைமுகம் வந்து சேர்ந்துள்ளது ‘அக்வா டைட்டன்’ என்ற சரக்கு கப்பல். இதை இந்தியா பெற்றது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
‘அக்வா டைட்டன்’ என்ற சரக்கு கப்பல் கச்சா எண்ணெய் உடன் சீனாவுக்கு சென்று கொண்டிருந்தது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் விலக்கு அறிவித்தது அமெரிக்கா. அதன் பின்னர் இது சாத்தியமாகி உள்ளது. அமெரிக்காவின் அனுமதியை அடுத்து கடலில் இருந்த இந்த கப்பல் இந்தியா நோக்கி தனது ஓட்டத்தை திசை திருப்பியது.
7 கப்பல்களில் முதலாவது: கடந்த 18-ம் தேதி அன்று ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் சுமார் 7 சரக்கு கப்பல்கள் இந்தியா நோக்கி பயணிப்பதாக ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த 7 கப்பல்களும் சீனாவுக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல். கடல் வழி பயணத்தில் இருந்த இந்த கப்பல்களின் சரக்குகளை இந்திய நிறுவனங்கள் பெறுவதற்கான முயற்சியை முன்னெடுத்தன. அந்த வகையில் ‘அக்வா டைட்டன்’ இப்போது இந்தியா வந்துள்ளது. விரைவில் மற்ற கப்பல்களும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 எல்பிஜி சரக்கு கப்பல்கள்: முன்னதாக, இதே மங்களூரு துறைமுகத்துக்கு அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து எல்பிஜி உடன் Pyxis Pioneer சரக்கு கப்பல் வந்திருந்தது. கடந்த வாரம் குஜராத் மாநிலத்துக்கு எல்பிஜி உடன் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி உள்ளிட்ட சரக்கு கப்பல்கள் வந்திருந்தன. இந்த இரண்டு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை போர்ச் சூழலுக்கு மத்தியில் பாதுகாப்பாக கடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.