வணிகம்

சிப் தட்டுப்பாட்டால் ஐபோன் உள்ளிட்ட கேட்ஜெட்களின் விலையை உயர்த்தும் ஆப்பிள் நிறுவனம்

வேட்டையன்

வாஷிங்டன்: சிப் பற்றாக்குறை காரணமாக ஐபோன் உட்பட பல்வேறு டிஜிட்டல் சாதனங்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உறுதி செய்துள்ளார்.

சர்வதேச அளவில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் சாதன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் விலையை உயர்த்தின. ஒன்பிளஸ், நத்திங் உள்ளிட்ட நிறுவனங்கள் விலையை உயர்த்தி உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக உயர்ந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வரிசையில் இப்போது ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது.

உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி காரணமாக மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை டிம் குக் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனால் ஆப்பிள் சாதன பொருட்களின் விலை உயர்கிறது.

மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா உள்ளன.

அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் இன்னும் பிற சாதனங்களுக்கு பயனர்கள் மத்தியில் தனி டிமாண்ட் உள்ளது. தனித்துவமான பயனர் அனுபவம், பாதுகாப்பு உள்ளிட்டவை இதற்கு அடிப்படை காரணங்கள். அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் ஆப்பிள் சாதனங்களுக்கு மவுசு இருக்கிறது. அதுவே சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் நிலைநிற்க காரணம். உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எந்தெந்த ஆப்பிள் சாதனங்களின் விலை உயர்கிறது?

டிம் குக் கூறியுள்ளதாக வைத்து பார்க்கும் போது ஆப்பிள் ஐபோன், மேக் சாதனங்கள், ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன கேட்ஜெட்களின் விலை உயர உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் மாடலை அறிமுகம் செய்யும். அதற்கு முன்பாக இந்த விலையேற்றம் இருக்கும் என தகவல்.

ட்ரம்ப் யோசனை: இதற்கிடையே இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்துக்கான சிப்களை தயாரிக்க வேண்டுமென ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆப்பிள் மற்றும் இன்டெல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல். இந்த ஏற்பாடு அமெரிக்காவில் தயாராகும் ஆப்பிள் சாதனங்களுக்கு பொருந்தும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT