சென்னை: பங்குச் சந்தையில் ப்யூச்சர் அண்டு ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 120 டாலர் வரை சென்ற கச்சா எண்ணெய் தற்போது 69 டாலர் வரை இறங்கி வந்துள்ளது.
போருக்கு முன்பு இருந்ததைவிட இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் விலையை ரூ.100-லிருந்து ரூ.108 ஆக ஏற்றியவர்கள், ரூ.108-லிருந்து குறைப்பது குறித்து பேசுவதில்லை அதேபோல, உயர்த்தப்பட்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையையும் குறைக்கவில்லை.
டீசல் விலையை குறைத்தால்தான் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றின் விலை குறையும். விலை குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளனர்.
பங்குச்சந்தையில் ஃப்யூச்சர் அண்டு ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகர்களை அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால், பல குடும்பங்கள் கடன் வாங்குவதை நிறுத்தும். நஷ்டம் அடைவதும் நிற்கும்.
தருமபுரியில் மனைவி, குழந்தையை கொன்று கணவர் தற்கொலை போன்ற நிகழ்வுகள் நடைபெறாது. குடும்பங்களையும் பாதுகாக்க முடியும். இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.