புதுடெல்லி: நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புச் சேவையான ‘பாரத் டாக்ஸி’யை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
வாகன அழைப்புச் சேவைச் சந்தையில் தற்போது உபெர், ஓலா மற்றும் ராபிடோ போன்ற சில நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக நிலையில்தான் மத்திய அரசே பாரத் டாக்ஸி சேவையை தொடங்கி உள்ளது. இந்த தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2002-ஆம் ஆண்டு பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, இந்தியாவின் முதல் கூட்டுறவு நிறுவனத்தால் இயக்கப்படும் வாகன அழைப்புச் சேவை முன்பதிவு தளம் இதுவாகும்.
இந்தத் தளம், எந்தவிதக் கமிஷனும் இல்லாத, கூடுதல் கட்டணமுமில்லாத விலை நிர்ணய முறையில் செயல்படும். இதன் லாபம் நேரடியாக ஓட்டுநர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட கால் டாக்ஸி ஆப்களுக்கு ஒரு உள்நாட்டு மாற்றாக இது திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, ‘‘பாரத் டாக்ஸி சேவை முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
பாரத் டேக்ஸியை தொடங்கி இருப்பதன் மூலம், அரசாங்கம் டாக்ஸி சேவைத் துறையில் நுழையவில்லை. மாறாக ஒரு கூட்டுறவு நிறுவனம்தான் இந்தத் துறையில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தக் கூட்டுறவு டாக்ஸி சேவை ஓட்டுநர்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் வருமானத்தை மேம்படுத்தி, அவர்களுக்குச் செழிப்பைக் கொண்டு வரும். ஓட்டுநர்கள் ஈட்டும் கட்டணத்தில் பாரத் டாக்ஸி எந்தவிதக் கமிஷனையும் வசூலிக்காது’’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய பொது மற்றும் தனியார் பங்குதாரர்களுடன் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.