புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால், இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதுடன், பல நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு , மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடந்த 26ம் தேதி அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. தற்போது நிலவும் சூழலில், எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும். இது அதிக எண்ணிக்கையிலான விமானச் சேவைகளை ரத்து செய்வதற்கு வழிவகுக்கும்.
இப்போதைய இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வரவும், சேவைகளைத் தொடர்ந்து தொய்வின்றி வழங்கவும் மத்திய அரசு உடனடியாக நிதி ரீதியிலான ஆதரவை வழங்க வேண்டும். குறிப்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சேவைகளுக்கான எரிபொருள் விலையில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, சீரான விலைக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
வரி விலக்கு கோரிக்கை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் விமான நிறுவனங்கள் இரட்டைப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. எனவே, விமான எரிபொருள் மீதான 11 சதவீதக் கலால் வரியைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.