பெங்களூரு: இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை அதிநவீன முறையில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம் இடையே ஐந்து ஆண்டு காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ திட்டத்தின் கீழ், நாட்டின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு ஏஐ தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது முப்படை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகத்தின் கீழ் வரும் ஒருங்கிணைந்த அமைப்புகளுக்கு ஏஐ திட்டங்களைச் செயல்படுத்தும் பொதுவான தளமாக விளங்கும்.
ஏஐ பயன்பாடுகள், ஆராய்ச்சி, அறிவு மேலாண்மை, பயிற்சி அளித்தல் மற்றும் முக்கிய முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு ஆகியவற்றில் இரு அமைப்புகளும் இணைந்து செயல்படும். பாதுகாப்பு அமைப்புகளின் தரவு பாதுகாப்பு மற்றும் பொறுப்பான ஏஐ பயன்பாடுகளை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த ஏஐ கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு, நாட்டின் இறையாண்மை கொண்ட உள்கட்டமைப்பிலேயே இயங்கும்.