புதுடெல்லி: ஆன்லைன் கேமிங் தளமான வின்ஸோ (WinZO) தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனது முதல் கட்ட சோதனையை நவம்பர் மாதம் நடத்தியது. அப்போது, வின்ஸோ கேம்ஸ் வசமிருந்த சுமார் ரூ.505 கோடி மதிப்பிலான பத்திரங்கள், நிலையான வைப்புத்தொகை மற்றும் பரஸ்பர நிதிகளை முடக்கியதாகத் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக வின்ஸோ நிறுவனத்தின் நிறுவனர்களான சவுமியா சிங் ரத்தோர் மற்றும் பவன் நந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு சவுமியா சிங் ரத்தோருக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், வின்ஸோ-வின் கணக்கு தணிக்கை நிறுவனத்தில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வின்ஸோ நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான இசட்ஓ கேம்ஸ் வசமிருந்த, வங்கி இருப்பு, வைப்புத் தொகை உட்பட சுமார் ரூ.192 கோடி மதிப்பிலான சொத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.