சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி எல்ஐசியின் மொத்த பிரீமிய வருமானம் 10.90 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.4,74,005 கோடியாக உள்ளது.
வணிக ஆண்டு 2022-23-ல்முதல் வருட பிரீமிய அடிப்படையில் சந்தை பங்களிப்பாக 62.58சதவீதம் பெற்று எல்ஐசி முதன்மைஇடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த வணிக ஆண்டில் முதல் வருட பிரீமியமான ரூ.1.98 லட்சம் கோடிகளை விட 16.67 சதவீதம் அதிகமாக ரூ.2.32 லட்சம் கோடிகளை பெற்றுள்ளது. 2 கோடியே 4 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.
நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.36,397 கோடியாகவும், புது வணிக மொத்தமதிப்பு 16.46 சதவீத வளர்ச்சியடைந்தும் காணப்படுகிறது. இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒரு எல்ஐசி பங்குக்கு ரூ.3 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1,897 கோடிகள் வழங்கப்படவுள்ளன.
கடந்த வணிக ஆண்டில் ரூ.40.85 லட்சம் கோடியாக இருந்த நிறுவன சொத்து மதிப்பு 7.65 சதவீதம் உயர்ந்து ரூ.43.97 லட்சம் கோடியாக உள்ளது.
எல்ஐசி நிறுவனத் தலைவர்சித்தார்த் மொஹந்தி கூறும்போது, ``நிறுவனத்தின் வணிக முடிவுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் விரிந்துள்ள எங்களின் வணிகத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த வணிக வளர்ச்சியைத் தொடர்ந்து அடைய முயற்சி மேற்கொண்டு மிக நல்ல மதிப்பை அடைய முயற்சி செய்வோம். எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள பாலிசிதாரர்கள், முகவர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.