(சென்றவாரத் தொடர்ச்சி)
கூ
குள் தேடுபொறி சூப்பர் ஹிட். ஸ்டான்ஃபோர்ட் மாணவர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தங்கள் நண்பர்களுக்குச் சொன்னார்கள். ஒரே வருடத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது. தங்கள் கண்டுபிடிப்பை மெருகேற்றுவதற்காக லாரி - செர்கி செய்துகொண்டிருந்த முயற்சிகள், டவுன்லோட்கள், பல்கலைக் கழகத்தின் இணையப் பாட்டையில் (Internet Bandwidth) பெரும்பகுதியைப் பயன்படுத்தின. பிற மாணவர்கள் இணையத் தொடர்புகளைப் பயன்படுத்த முடியாமல் திணறினார்கள். தங்கள் பேராசிரியர்களிடம் முறையிட்டார்கள்.
கூகுள் பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியேறும் கட்டாயம். ஆனால், வெளியே போனால், இடம் வேண்டும், வாடகை தரவேண்டும், கணினிகள் வேண்டும். இவற்றுக்கு ஏராளமாக பணம் வேண்டும். ஒரு மில்லியன் டாலர்கள் கிடைத்தால், கூகுளின் ரகசியச் சூத்திரங்களை விற்க முடிவு செய்தார்கள். இந்த விலைக்குத் தர்க்கரீதியான காரணம் எதுவும் கிடையாது. ஒரு பெரிய தொகை என்பது மட்டுமே காரணம்.
வாங்குபவரை எப்படிக் கண்டுபிடிப்பது? கூகுளைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டும். இதற்காக, இணையத்தில், "The Anatomy of a Large - Scale Hypertextual Web Search Engine” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள். தேடுபொறி வரலாற்றில், இந்தக் கட்டுரை இன்றும் முக்கிய ஆவணம்.
வல்லுநர்களின் கவனம் கிடைத்தது. பயன்படுத்துவோர் நற்சாட்சிப் பத்திரங்கள் தந்தார்கள். ஆனால், கூகுளை விலைக்கு வாங்க யாரையும் காணோம். லாரி நடுத்தரக் குடும்பம். செர்கி பின்புலம் அதற்கும் கொஞ்சம் கீழ். ஆகவே, கைக்காசைப் போடும் நிலையில் இருவரும் இல்லை. கை கொடுத்தார் அவர்கள் பேராசிரியர் டேவிட் செரிடன் கூகுளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு லட்சம் டாலர்கள்* காசோலை கொடுத்தார். லாரி - செர்கி இருவருக்கும் இது வெறும் பணமல்ல, அவர்கள் திறமையில், கண்டுபிடிப்பில் ஒரு மேதை வைத்த நம்பிக்கை, நரம்புகளில் பாய்ந்த உற்சாக ஊற்று.
*செரிடனின் மூலதனத்தின் இன்றைய மதிப்பு பத்து லட்சத்து இருபதாயிரம் டாலர்கள்.
செரிடன் இத்தோடு நிற்கவில்லை. அவருடைய முன்னாள் மாணவர், ஆன்டி பெக்டொல்ஷைம், துணிகர முதலீட்டாளராக இருந்தார். அவரோடு லாரி - செர்கி சந்திக்க ஏற்பாடு செய்தார். ஆன்டி கூகுளின் தொழில்நுட்பத்தைப் பார்த்தார். அசந்துபோனார். இது ஜெயிக்கும் குதிரை என்று அவர் மனக்குறளி சொன்னது. அவரும் ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு செய்தார். ஆன்டியின் முதலீடு, பிசினஸ் உலகம் கொடுத்த அங்கீகார முத்திரை. இதனால், இன்னும் பலரும் முதலீடு செய்தார்கள்.
லாரி - செர்கி கையில் மொத்தம் பத்து லட்சம் டாலர்கள் மூலதனம் ரெடி. ஆனாலும், இருவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்டார்கள். ஒருவேளை பிசினஸ் சரியாக ஓடாவிட்டால்.....ஆகவே, படிப்பை விடவில்லை. விடுமுறை எடுத்துக்கொண்டார்கள். தேவைப்பட்டால் திரும்பிவரலாம், டாக்டர் பட்டம் வாங்கலாம். பேராசிரியராகலாம். அன்றாட வாழ்க்கையை ஓரளவு வசதியாக ஓட்டலாம்.
1998. செப்டம்பர் 7. நிறுவனத்தைப் பதிவு செய்தார்கள். லாரி சிஇஓ. செர்கி சேர்மன். ஆரம்பம் முதலே கூகுளின் பாதை பற்றி இருவருக்கும் ஒருமித்த கருத்து - பெரும்பாலான இன்டர்நெட் கம்பெனிகள்போல், விளம்பரங்களிலும், பரபரப்புச் செய்திகளிலும் புகழ் தேடக்கூடாது. தொழில்நுட்பத்தைக் கனகச்சிதமாக்க வேண்டும், கூகுளைப் பயன்படுத்துவோருக்குச் சுகானுபவம் தர வேண்டும். இந்தப் பாதை அதிக நாட்கள் எடுக்கலாம். ஆனால், நேர்மைதான் நம் பாதை.
கூகுள் தேடுபொறியைப் பட்டை தீட்ட ஏராளமான புரோகிராமர்கள் தேவைப்பட்டார்கள். புதிய கம்பெனி. எப்படி வருமானம் வரப்போகிறது, கையிருப்பு ஒரு மில்லியன் டாலர்கள் தீர்ந்தபின் என்னவாகும் என்று பல கேள்விக்குறிகள். பதில் எதிர்பாராத விதமாக வந்தது. 1997 - 2001 காலகட்டம். இன்டர்நெட் கம்பெனிகள் சீட்டுக்கட்டு மாளிகைகளாகக் கவிழ்ந்தன. ஆயிரக் கணக்கான கம்ப்யூட்டர் நிபுணர்கள் வேலை இழந்தார்கள். இதில் பலர் அதீதத் திறமைசாலிகள். குறைந்த சம்பளத்துக்கு வரத் தயாராக இருந்தார்கள். கூகுள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.
கூகுள் போன்ற தொழில்நுட்பக் கம்பெனியின் முக்கிய சொத்து ஊழியர்களின் மூளைதான். எனவே, லாரி-செர்கி இருவரும், பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பை எப்படி அதிகமாக்கலாம் என்று எப்போதும் சிந்தித்தார்கள். வகை வகையான இலவச உணவுகள், பொழுதுபோக்கு, ஜிம், ஷார்ட்ஸ், டி-ஷர்ட்கள் என விருப்பமான உடைகளில் வரும் சுதந்திரம் என, இதுவரை எந்த கம்பெனியும் தந்திராத வசதிகள்.
”தீய சக்தியாக இருக்காதே” என்பது ஆரம்பம் முதலே கூகுளின் தாரக மந்திரம். ஒரு நிறுவனம் தன் கொள்கைகளில் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதற்கான உரைகல் - சிக்கல்கள் சூழும்போது, அந்தக் கொள்கைகளைக் கடைபிடிக்கிறார்களா அல்லது காற்றில் பறக்க விடுகிறார்களா என்பதுதான். பிசினஸ் நேர்மைக்கான இந்த அக்னிப் பரீட்சையில் ஜெயித்துக் காட்டினார்கள் லாரி - செர்கி.
இணையத் தேடல்களுக்கான விடைகளைப் பட்டியலிடும்போது, அதில் ஆங்காங்கே விளம்பரங்களையும் செருகினால், அதன்மூலம் கூகுளுக்கு நிறைய வருமானம் கிடைக்கும் என்று பலர் ஆலோசனை சொன்னார்கள். வருமானத்தை எப்படி உருவாக்கலாம் என்று கூகுள் தலைகீழாக நின்றுகொண்டிருந்த நேரம். ஆனால், லாரி - செர்கி உடனேயே மறுத்துவிட்டனர். விளம்பரதாரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, நிஜமான தேடல் விடைகளில் அவர்களுடைய இணையப் பக்கங்களை இணைத்துக் காண்பிப்பது, பயன்படுத்துவோரை ஏமாற்றுவது என்பது அவர்கள் வாதம். இதனால் வந்த வருமான இழப்புகளையும் மனமார ஏற்றுக்கொண்டார்கள்.
கூகுள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குப் பல லட்சங்களாகிக் கொண்டிருந்தது. இந்த வரவேற்பைக் கண்டு, Sequoia Capital, Kleiner Perkins Caufield & Byers என்னும் இரு துணிகர முதலீட்டு நிறுவனங்கள் தலா 12.5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தார்கள். பெரிய அலுவலகம், ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள், சாஃப்ட்வேர் வல்லுநர்கள் எனப் பிரம்மாண்ட வளர்ச்சி. வருமானத்தைத்தான் காணோம். இதை மாற்றி, பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள் என்று கூகுளைப் பாடவைத்தது, Adwords திட்டம்.
நீங்கள் இணையத்தில் ”கம்ப்யூட்டர்” என்று தேடுகிறீர்கள். அப்போது, அது தொடர்பான செய்திகளுடன், கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் விளம்பரங்கள் வரும். இதில் க்ளிக் செய்தால், தேடுபொறிக் கம்பெனிக்கு ஒவ்வொரு க்ளிக்குக்கும் விற்பனையாளர் பணம் தருவார். ஒரே கல்லில் மூன்று மாங்காய் - தகவல் தேடுபவருக்கு அது தொடர்பான அதிகச் செய்தி; பொருள் விற்பனையாளருக்கு அவரைத் தொடர்பு கொள்பவர்களுக்காக மட்டுமே செலவு; தேடுபொறிக் கம்பெனிக்குப் பணம்.
1998 - இல் பில் க்ராஸ் என்னும் தொழில் முனைவர், இந்த அடிப்படையில் GOTO.com என்னும் சேவை தொடங்கினார். இந்தச் சேவையை Adwords என்னும் பெயரில் 2000 - ஆம் ஆண்டில் கூகுள் தொடங்கினார்கள். தேடுபொறியில் நம்பர் 1 ஆக இருந்ததால், இந்தச் சேவை மாபெரும் வெற்றி கண்டது.
GOTO.com நிறுவனத்தை யாஹூ வாங்கினார்கள். 2002. தங்கள் காப்புரிமையை மீறிவிட்டதாக கூகுள் மேல் வழக்குப் போட்டார்கள். இரண்டு வருடங்கள் வழக்கு நடந்தது. இதன் நடுவே, இருவருக்குமிடையே சமரசப் பேச்சு வார்த்தைகள். 2004-ம் ஆண்டு சுமார் 300 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கொண்ட தங்கள் கம்பெனி பங்குகளை கூகுள், யாஹுவுக்குத் தந்தார்கள்.
அதே 2004ம் ஆண்டு கூகுள் தன் பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்கியது. சந்தை மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள். லாரியும், செர்கியும் கோடீஸ்வரர்கள். இதற்குப் பிறகு கூகுளுக்கு ஏறுமுகம்தான். 2006 - இல் கூகுள் வாங்கிய யுடியூப், கம்பெனி வரலாற்றில் முக்கிய மைல்கல். ஆண்ட்ராய்ட் போன்கள், ஓட்டுநர் இல்லாத கார்கள், கூகுள் ஹோம் என அன்றாட வாழ்க்கையைச் சுலபமாக்கும் கருவி, வீட்டுத் தட்ப வெட்பநிலையைச் சீராக்கும் நெஸ்ட், வீடுகளுக்கு மளிகை சாமான்கள் சப்ளை செய்யும் கூகுள் எக்ஸ்பிரஸ் எனப் பல்வேறு துறைகளில் விரிவாக்கம். அமேசானுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய இன்டர்நெட் கம்பெனி கூகுள். 50 நாடுகளில் கிளைகள். 60,000 - க்கும் அதிகமான ஊழியர்கள்.ஆண்டு வருமானம் 75 பில்லியன் டாலர்கள் (சுமார் 4,87,500 கோடி ரூபாய்.)
கூகுள் வளர்ச்சியில் நமக்குத் தனிப்பெருமை. ஏன் தெரியுமா? இன்று கம்பெனியை வழிநடத்தும் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை நம்ம ஆளு. தமிழர்!
slvmoorthy@gmail.com