குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக இரண்டு நாட்கள் தேயிலை கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை (மே 20) தொடங்குகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனையொட்டி காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகுப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக, முதல்முறையாக தேயிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மே 20, 21-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கண்காட்சியில், தேயிலை குறித்த 30 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அன்றாடம் பருகக்கூடிய தேநீரில் பயன்படுத்தப்படும் தேயிலைத் தூளின் பல்வேறு வகைகள் காட்சிப்படுத்தப்படுவதுடன், அதன் சுவை அறியும் திறன் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு, விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு தேயிலை விவசாயிகள் முன்னெடுத்துள்ள சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது" என்றார்.