வணிகம்

செப்டம்பரில் `செயில்’ பங்கு விற்பனை

செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனமான உருக்கு ஆணையம் (செயில்) நிறுவன பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பங்கு விற்பனை செப்டம்பர் மாதம் நடைபெறும். செயில் நிறுவனத்தில் மத்திய அரசிடம் உள்ள பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாடுகளில் விளம்பரம் செய்யும் பணிகள் (ரோட்-ஷோ) இம்மாத இறுதியில் தொடங்க உள்ளன. இந்த விளம்பரங்கள் சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதேபோல உள்நாட்டிலும் விளம்பரப் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன. இந்த பணிகள் ஒரு மாத காலம் நடைபெறும் என்று அரசு பங்கு விலக்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செயில் பங்கு விற்பனையைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி, ஆர்இசி, பிஎப்சி,. என்ஹெச்பிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளையும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

செயில் நிறுவனத்தின் பங்குகள் இப்போது ரூ. 85 விலையில் விற்கப்படுகின்றன. இதே விலையில் 5 சதவீத பங்குகள் அதாவது 20.65 கோடி பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ. 1,800 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2012-ம் ஆண்டு ஜூலை மாதம் கூடிய மத்திய அமைச்சரவை செயில் நிறுவனத்தின் 10.42 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன்படி 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 5.82 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இப்போது 5 சதவீத பங்குகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடியையும், கோல் இந்தியாவின் 10 சதவீத பங்கு வற்பனை மூலம் ரூ. 23 ஆயிரம் கோடியையும் திரட்டஅரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனிடையே என்ஹெச்பிசி நிறுவனத்தின் 10.96 சதவீத பங்குகளை விற்பனை செய்வது மற்றும் ஆர்இசி, பிஎப்சி நிறுவனங்களில் தலா 5 சதவீத பங்குளை விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முடிவை இறுதி செய்யும் பணிகளை பங்கு விலக்கல் அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

பங்குகளை விற்பனை செய்வதற்கு உரிய வங்கிகளை நியமிப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அனைத்து பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கான பணிகள் அடுத்த மாதத்திலிருந்து படிப்படியாகத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அந்நிறுவன ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கோல் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் முடிவு இதற்கு முன்பு ஒரு முறை திரும்பப் பெறப்பட்டது.

இந்நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு முன் ஊழியர் சங்கங்களை சரிக்கட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

SCROLL FOR NEXT