கோப்புப்படம் 
வணிகம்

ரூபாயில் வர்த்தகம் செய்வது தொடர்பான இந்தியா, ரஷ்யா பேச்சுவார்த்தை நிறுத்தம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா இடையே ரூபாயில் வர்த்தகம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் கச்சா எண்ணெய் தேக்கமடைந்ததால் அதனை குறைந்த விலையில் விற்க ரஷ்யா முன்வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியா முடிவு செய்தது. இதன்படி, ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு வரலாறு காணாத வகையில் அதிகரித்தது.

அதேநேரம், ரஷ்யாவுடனான வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலருக்கு பதில் இந்திய ரூபாயை பயன்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாததால், இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்தியாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கூறும்போது, “ரூபாயில் வர்த்தகம் செய்வதற்காக குறிப்பிட்ட தொகையை (ரூபாயை) கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை ரஷ்யா ஏற்க மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பதால், அதிக அளவில் ரூபாயை கையிருப்பில் வைத்துக் கொள்வதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே, சீனா (யுவான்) உள்ளிட்ட இதர நாடுகளின் கரன்சியில் வர்த்தகம் செய்யலாம் என ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது” என்றனர்.

இப்போதைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம் உள்ளிட்ட சில நாடுகளின் கரன்சிகள் மூலம் இந்தியா, ரஷ்யா இடையே வர்த்தகம் நடைபெற்று வருவதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT