இந்த வாரம் சிறிய நிறுவனங்களுக்கான மனித வள மேம்பாட்டைக் குறித்துக் காண்போம். மனித வளம், பொருள் மற்றும் பணம் சேர்ந்துதான் ஒரு தொழில் உருவாகிறது. ஒரு தொழிலை உயர்த்துவதிலும் அல்லது நலிவடையச் செய்வதிலும் மனித வளத்தின் பங்கு மிக அதிகம். நல்ல மனிதர்களே நல்ல நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். பெரிய நிறுவனங்களுக்கு மனித வளத்தை கண்காணிப்பதற்கும் மேன்மைப் படுத்துவதற்கும் பெரிய அளவில் இலாகாக்கள் உள்ளன.
இன்று மனித வளத்துறை அதிகாரிகள் தத்தம் நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார்கள். காரணம் ஏனென்று உங்களுக்கே புரியும். இன்றைய அறிவுசார் தொழில் உலகத்தில் மனித வளத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.
பெரிய நிறுவனங்களுக்குப் போதுமான அளவு பணவசதியும் ஆள் பலமும் இருப்பதால் அவர்களால் நூற்றுக்கணக்காண/ ஆயிரக்கணக்காண/ லட்சக்கணக்காண தொழிலாளர்களை சுலபமாக நிர்வகிக்க முடிகிறது. ஆனால் நீங்கள் ஒரு சிறிய நிறுவனத்தை துவங்கும் பொழுது உங்களுக்கு ஒவ்வொரு செயலும் கடினமாகத் தோன்றும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆளை வேலைக்கு எடுப்பீர்கள். அவர் வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதத்திலேயே நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறுவார். அல்லது நீங்கள் ஒரு முக்கிய பொறுப்பில் வேலைக்கு ஒரு நபரை அமர்த்தியிருப்பீர்கள். அவருக்கு நன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பீர்கள்.
அவர் இல்லாமல் தொழில் நடத்த முடியாத அளவிற்கு அவரின் முக்கியத்துவம் உங்கள் நிறுவனத்தில் உயர்ந்திருக்கும். அவர் திடீரென்று ஊதிய உயர்வு எக்கச்சக்கமாக வேண்டுமென்று கூறுவார். சில சமயங்களில் உங்களை பிளாக்மெயில் செய்வது போன்று கூட இருக்கும். இன்னும் சில சமயங்களில் உங்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்படும். நீங்களும் நல்ல ஊதியம் கொடுக்க தயாராக இருப்பீரகள்.
ஆனால் உங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர யாரும் முன்வர மாட்டார்கள். காரணம் நீங்கள் ஒரு சிறிய நிறுவனம் என்பதுதான். இவற்றையெல்லாம் நினைத்தால் ஏன் நான் தொழில் ஆரம்பித்தேன்; நேரடியாக வேலைக்கு சென்றிருக்கலாமே என்றுகூட உங்களுக்கு விரக்தி ஏற்படும்.
இந்த பிரச்சினையெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல; பல லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரியிலிருந்து, பல கோடி முதலீடு செய்து தொழில் நடத்தக்கூடிய தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் உள்ளது.
அதுவும் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில் இது போன்ற பிரச்சினைக்குக் குறைவே இருக்காது. இவற்றையெல்லாம் சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சரி இவற்றை சமாளிப்பது எப்படி?
நீங்கள் முதன் முதலாக தொழில் துவங்கும் பொழுது உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் வேலைக்கு ஆட்களை சேர்க்கப் பாருங்கள். பெரும்பாலும் பயிற்சி செய்யப்பட்ட அல்லது அனுபவமிக்க ஆட்கள் உங்களுக்கு கிடைக்கமாட்டார்கள். ஆகவே கல்லூரிகளிலிருந்து புதிதாக வெளிவரும் மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து நீங்கள்தான் பயிற்சி கொடுக்க வேண்டும்.
இவர்கள் நேரடியாக கல்லூரியிலிருந்து வருவதால் உங்கள் தொழில் தேவைகளுக்கேற்ப அவர்களை நீங்கள் வளைக்கலாம். மேலும் அவர்களுக்கு வேலை என்பது ஒரு புதிய அனுபவம் என்பதால் விருப்பமாக வேலை செய்வார்கள்.
சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும்பொழுது அவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்களும் கிடைக்கும். மேலும் முக்கியத்துவமும் கிடைக்கும். இவற்றோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலையில் ஒரு திருப்தியும் கிடைக்கும். இதுவே அவர்கள் பெரிய நிறுவனத்தில் சேர்ந்தால் அவர்களுக்கு கற்றுக்கொள்ள கிடைக்கும் வாய்ப்பு குறைவுதான். பத்தோடு ஒன்று பதினொன்றாக அவர்கள் அங்கே வேலை செய்வார்கள். மேலும் முக்கியத்துவம் என்பது அவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.
நீங்கள் கொடுப்பதைவிட பெரிய நிறுவனத்தில் சம்பளம் சற்று அதிகமாக கொடுக்கலாம். அது ஒன்றுதான் அவர்களுக்கு கிடைக்கும் லாபம். வேலைக்குச் சேருபவர்களிடம் இந்த லாப நஷ்டங்களை எடுத்துக் கூறும் பொழுது அவர்களும் உங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர விருப்பமாக இருப்பார்கள்.
நீங்கள் தொழில் திட்டம் வகுக்கும் பொழுதே ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை சந்தை விலையை ஒட்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், சந்தையை விட நீங்கள் ஊதியம் குறைவாகக் கொடுக்கும் பொழுது அவர்கள் உங்களிடம் அதிக நாள் தங்கமாட்டார்கள். ஊழியர்கள் வருவதும் செல்வதும் உங்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.
ஆரம்ப காலத்தில் நீங்கள் தொழில் துவங்கும் பொழுது இவையெல்லாம் பிரச்சினையாகத் தெரியும். ஆனால் வருடங்கள் ஆக ஆக, நெளிவு சுழிவுகளை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
prakala@gmail.com