புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வரி ரூ.1,87,035 கோடி வசூலாகி புதிய உச்சம் தொட்டிருக்கிறது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1.67 லட்சம் கோடியை விட 12 சதவீதம் அதிகம்.
நாட்டின் உள்நாட்டு பரிவர்த்தனைகளின் (இறக்குமதி சேவைகளையும் உள்ளடக்கியது) ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 16 சதவீதம் உயர்வடைந்து வருகிறது. பொருள்களின் இறக்குமதி மூலம் பெறப்பட்ட வருவாய் கடந்த மார்ச் மாதம் 8 சதவீதம் உயர்ந்த நிலையில், ஏப்ரல் மாத வருவாய் விபரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை.
ஜிஎஸ்டி இழப்பிட்டு வரியான செஸ் வசூலும், ரூ 12,025 கோடி வசூலாகி புதிய உச்சம் தொட்டிருக்கிறது. இதில் பொருள்கள் இறக்குமதி மூலம் பெறப்பட்ட ரூ.900 கோடி வருவாயும் அடங்கும். இது கடந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான ரூ.11,931 கோடி சாதனையை முறியடித்துள்ளது. இதுவரை வசூலான தொகையில் இதுவே அதிகபட்சமான வசூலாகும். அதேபோல், ஏப்ரல் 20ம் தேதி ஒரே நாளில் அதிக ஜிஎஸ்டி வரி வசூலாகி சாதனை படைத்துள்ளது. அன்று மட்டும் 9.8 லட்சம் வரிசெலுத்துவோர் மூலமாக ரூ.68,228 கோடி வசூலாகியது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.