குன்னூர்: ‘தங்க இலை’ விருது போட்டியில் கேரளாவை சேர்ந்த கண்ணன் தேவன் நிறுவனம் 7, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் 3 விருதுகளை வென்றுள்ளது.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி), தேயிலை வாரியம் ஆகியவை சார்பில், தென் மண்டல அளவில் சிறந்த தேயிலைக்கான ‘தங்க இலை’ விருதுகள், கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனைமலை (தமிழ்நாடு), திருவாங்கூர், ஹா ரேஞ்சஸ் (மூணாறு), வயநாடு (கேரளா), கர்நாடகா, நீலகிரி (தமிழ்நாடு) என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அங்குள்ள தொழிற்சாலைகளின் சிறந்த தேயிலையை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டு விருதுக்கான முதற்கட்ட தேர்வு, கடந்த மார்ச் மாதம் குன்னூர் உபாசி அரங்கில் நடைபெற்றது. இதில், தேயிலை தூளின் தரம், மணம், சுவை ஆகிய குணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நீலகிரி, கேரளா, வயநாடு, வால்பாறை, மூணாறு, கர்நாடகா என தென் மாநிலங்களிலுள்ள 32 நிறுவனங்களைச் சேர்ந்த 115 வகை தேயிலைகள் போட்டியில் இருந்தன.
இதில், 62 ரக தேயிலை தூள்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. துபாயை சேர்ந்த அப்துர்ரகுமான் குன்னத், அண்ட்ரே கிரநவ், மைக் ஜோன்ஸ், சஞ்சிவ் சாட்டர்ஜி, சப்னம் வெப்பர், ஷெரோன் ஹால் மற்றும் யாஹா ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்து, தேயிலை தூளின் மணம், தரம், குணத்தை ஆய்வு செய்தனர்.
விருதுக்கான குழு ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறும்போது, "18-வது ‘தங்க இலை’ விருதுக்கான இறுதிப்போட்டி கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை துபாயில் நடைபெற்றது. இறுதிகட்ட போட்டிக்கு 62 ரக தேயிலை தூள்கள் தேர்வாகின. இதில், கண்ணன் தேவன் நிறுவனம் 7 விருதுகளை வென்றது.
ஹரிசன்ஸ் மலையாளம் லிமிடெட், பாரி ஆக்ரோ இன்டஸ்ட்ரிஸ் தலா 4 விருதுகளையும், தர்மோனா டீ இன்டஸ்ட்ரி, கிரீன் டீ எஸ்டேட், கோடநாடு டீ எஸ்டேட், ஸ்ரீ வசுபத்ரா பிளான்டேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் தலா 3 விருதுகளையும், போப்ஸ், வுட்பிரயர் தலா இரண்டு விருதுகளையும், ரவுஸ்டான்முல்லை எஸ்டேட் ஒரு விருதையும்பெற்றன. மற்றொரு பிரிவில் மேலும் ஒரு விருதை ஹரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன" என்றார்.0