மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயர்வடைந்து 60,736.97 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 17,941 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்தகம் நிலையில்லாத தன்மையை அடைந்தது. காலை 09:34 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 44.06 புள்ளிகள் சரிவடைந்து 60,605.32 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.25 புள்ளிகள் சரிந்து 17,896.80 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், சில நிறுவனங்களின் வலுவான காலாண்டு அறிக்கைகளை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. இருந்தபோதிலும், குறிப்பிட்ட சில பங்குகளின் சரிவால் தனது தொடக்க லாபத்தை இழந்து சரிவில் பயணிக்கத் தொடங்கியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை விப்ரோ, டெக் மகேந்திரா, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசூகி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா, எம் அண்ட் எம் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.