திண்டுக்கல்: தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை சீரமைத்து அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மே 5-ம் தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை முதல்வர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இதனை உடனடியாக சீரமைத்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.
தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை. தற்போது பல இடங்களில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு அதற்கான கூடுதல் ஊதியம் கொடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அதிகமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 12 மணி நேர வேலையில் தொழிலாளர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள், பாதிப்புகள் ஏற்பட்டால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த வேண்டியது தான். நியாயமான கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
நாடு முன்னேறும்போது இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படுவது சகஜம். இதை எல்லாம் கடந்து, முதல்வர் விரைவாக 12 மணி நேர வேலைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.