வணிகம்

இந்திய துறைமுகங்களில் கடந்த 9 ஆண்டுகளில் சரக்குகளை கையாளும் திறன் 1,650 மில்லியன் டன்னாக உயர்வு: மத்திய அமைச்சர்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் 1,650 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என்று மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறினார்.

சென்னை துறைமுகத்தில் ரூ.50 கோடியில் கப்பல் இறங்கு தளம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரூ.5 கோடியில் 15 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான சேமிப்புக் கிடங்கு, ரூ.80 லட்சத்தில் 40,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.92 கோடியில் 4.8 கி.மீ. நீள 4 வழிச் சாலைஎன மொத்தம் ரூ.148 கோடியிலான திட்டப் பணிகள் தொடக்க விழாசென்னையில் நேற்று நடைபெற் றது.

மத்திய துறைமுகங்கள் மற்றும்கப்பல் போக்குவரத்துத் துறைஅமைச்சர் சர்பானந்த சோனோவால், திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் கடந்த 2014-ம் ஆண்டு நிலவரப்படி, ஆண்டுக்கு 800 மில்லியன் டன் சரக்குகளை மட்டுமே கையாண்டன. 2014-ல்பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 9 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களின் சரக்குகளைக் கையாளும் திறன் 1,650 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

இன்று இரு துறைமுகங்களிலும் தொடங்கப்பட்டுள்ள 4 திட்டப் பணிகள் நிறைவடையும்போது, சென்னை துறைமுகத்தில் ஒரு மில்லியன் டன், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 6 மில்லியன் டன் என மொத்தம் 7 மில்லியன் டன் சரக்குகளை கூடுதலாகக் கையாள முடியும். நடப்புநிதியாண்டில் இரு துறைமுகங்களிலும் 100 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 13.1% அதிகமாகும்.

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே உயர்நிலைச் சாலை அமைக்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும். நாட்டின் கிழக்கு கடற்கரையில் சென்னை துறைமுகம், கப்பல் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. இதைகடந்த ஆண்டு 85 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். ஏராளமான பன்னாட்டுக் கப்பல் சுற்றுலா நிறுவனங்கள், சென்னை துறைமுகத்தில் இருந்து தங்கள் சுற்றுலா கப்பல்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

மப்பேடு பகுதியில் ரூ.349 கோடி யில் பல்வகை சரக்குப் போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிகள் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT