கோப்புப் படம் 
வணிகம்

பெரிய துறைமுகங்களில் சரக்குகளைக் கையாள்வது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு: மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் பெரிய துறைமுகங்கள் கடந்த 2022-23 நிதியாண்டில் முன்னெப்போதுமில்லாத அளவாக 79.50 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளதாக துறைமுகங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி ஆகிய துறைகளின் செயலரான சுதான்ஷ் பந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ''நாட்டின் பெரிய துறைமுகங்கள் கடந்த 2022-23 நிதியாண்டில் முன்னெப்போதுமில்லாத அளவாக 79.50 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம்.

கொல்கத்தாவில் உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம், குஜராத்தின் கன்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகம், மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம், ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் ஆகிய துறைமுகங்கள் முன்னெப்போதுமில்லாத அளவாக அதிக சரக்குகளை கையாண்டுள்ளன. அந்த வகையில் பெரிய துறைமுகங்கள் 2022-23ல், 10.40 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சிறிய துறைமுகங்கள் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வளர்ச்சி பெற்றுள்ளன.

2021-22ல் ஒட்டுமொத்த துறைமுகங்களில் பெரிய துறைமுகங்கள் 54 சதவீத சரக்குகளைக் கையாண்டன; சிறிய துறைமுகங்கள் 46 சதவீத சரக்குகளைக் கையாண்டன. 2022-23ல் பெரிய துறைமுகங்கள் 55 சதவீத சரக்குகளையும், சிறிய துறைமுகங்கள் 45 சதவீத சரக்குகளையும் கையாண்டுள்ளன. பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஒரு சதவீதம் உயர்ந்திருப்பது மிக முக்கிய சாதனை. ஏனெனில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இதேபோல், 2022-23ல் உள்நாட்டு நீர்வழிகளில் 12.60 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 2021-22ல் இது 10.90 கோடி டன்னாக இருந்தது. இதன்மூலம், 2022-23ல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரிய துறைமுகங்களில் சரக்கு கப்பல்கள் திரும்பும் நேரம் 48 அல்லது 49 மணி நேரமாகக் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 3-4 மணி நேரம் குறைந்திருக்கிறது” என்று மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி ஆகிய துறைகளின் செயலரான சுதான்ஷ் பந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT