டெல்லி ஆப்பிள் ஸ்டோர் 
வணிகம்

இந்தியாவில் 2-வது ஆப்பிள் ஸ்டோர் திறப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் தனது இரண்டாவது ஸ்டோரை திறந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த பிரத்யேக ஸ்டோர் தலைநகர் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் இதனை திறந்து வைத்துள்ளார். ஆப்பிள் தயாரிப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்டோரை பார்வையிடும் ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் டெல்லி ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்னர் மும்பையில் ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்த டிம் குக், ஆப்பிள் சாதன பயனர்களை சந்தித்து இருந்தார். அதே போல டெல்லியிலும் அவர் பயனர்கள் மற்றும் மக்களை சந்திப்பார் எனத் தெரிகிறது.

டெல்லியின் தெற்கு பகுதியில் இந்த ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆப்பிள் Saket’ என அறியப்படும் இந்த ஸ்டோரில் 18 மாநிலங்களை சேர்ந்த 70 சில்லறை விற்பனை குழு உறுப்பினர்கள் இருப்பதாகவும். இவர்கள் பயனர்களுடன் 15 மொழிகளில் பேசுவார்கள் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் இது மும்பையில் திறக்கப்பட்ட ஸ்டோரை காட்டிலும் சிறிய அளவில் இருப்பதாக தகவல்.

இந்திய நாட்டில் ஸ்டோர் திறந்துள்ளது ஆப்பிள் நிறுவனத்துக்கு மிகமுக்கிய மைல்கல் என்றும் சொல்லப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உள்ள இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐபோன்கள், மேக்புக், ஆப்பிள் அக்ஸசரிஸ், ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி என இந்தியாவில் கிடைக்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களும், சேவைகளையும் இந்த ஸ்டோரில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT