நாமக்கல் / சேலம்: கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது, என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: அகில இந்திய பாஜக தலைவராக தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருந்தபோது, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மாவட்ட பாஜகவிற்கு சொந்த அலுவலகக் கட்டிடம் அமைக்க வேண்டும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட அலுவலகத்திற்கு நவீன வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இறால் மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 9 புதிய வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாமக்கல் ரயில் நிலையம் ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.
பயணிகளின் வசதிக்காக, நாமக்கல்லில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.50 கோடி மதிப்பில் நவீன ரயில் நிலையம் கட்டுவதற்கு ரயில்வே துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ராசிபுரம் மற்றும் நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும், இரண்டு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்; விரைவில் அதற்கான அறிவிப்பு வரும், என்றார். மாநில துணைத் தலைவர்கள் கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சேலத்தை அடுத்த தாரமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார். மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுதிர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் ரயில் நிலையம் ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.