கோவை: நெருக்கடியைச் சமாளிக்க பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் ரவி சாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு பருத்தி சீசன் அல்லாத காலத்தில் (ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை) பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்களித்தது போன்று நடப்பு பருத்தி பருவ காலத்திலும் இறக்குமதி வரியிலிருந்து மத்திய நிதித்துறை அமைச்சர் விலக்களிக்க வேண்டும்.
கடந்த ஆண்டை விட பருத்தி ஜவுளி ஏற்றுமதி 23 சதவீதம் குறைந்துள்ளது. ஜவுளித்தொழிலின் பருத்தி தேவை பொதுவாக ஆண்டுக்கு 320 லட்சம் முதல் 330 லட்சம் பேல்கள் என்ற நிலையில், உற்பத்தி வெறும் 310 லட்சம் முதல் 320 லட்சம் பேல்கள் என்ற அளவிலேயே தற்போது உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் 310 முதல் 320 லட்சம் பருத்தி பேல்களில் 80 சதவீதம் மட்டுமே தரமானதாக உள்ளது.
மீதமுள்ள பருத்தியை மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்த முடியாது. பொதுவாக 30 முதல் 40 லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அறிவிக்கப்படாவிட்டால், ஜவுளித் தொழில் கடுமையான பற்றாக்குறையை சந்திக்கும்.
இறக்குமதி செய்யப்படும் பருத்தி பஞ்சாலை வளாகத்துக்கு வர மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். எனவே, பஞ்சாலைகள் இறக்குமதி ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு இறக்குமதி வரியை உடனடியாக நீக்குவது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.