மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனை இலவசமாக டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்து வருகிறது ஜியோ சினிமா. இந்நிலையில், இந்த சீசனுக்கு பிறகு ஜியோ சினிமா தள பயனர்களிடமிருந்து சந்தா கட்டணம் வசூலிக்க உள்ளதாக தெரிகிறது. முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா தளத்தில் மேலும் 100 சினிமா மற்றும் டிவி சீரிஸ்களை சேர்த்த பிறகு பயன்பாட்டுக்கான சந்தா கட்டணம் வசூலிக்கும் முறை செயல்பாட்டுக்கு வருகிறது.
அடுத்த மாதம் சந்தா குறித்த விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது. இருந்தாலும் நடப்பு ஐபிஎல் சீசன் முடியும் வரை பயனர்கள் ஜியோ சினிமா தளத்தில் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும் என உறுதி செய்துள்ளது அந்த தளம். ஜியோ சினிமா தளத்தின் கட்டணம் மலிவானதாக இருக்கும் என்றே தெரிகிறது.
ஜியோ சினிமா தளத்தில் 4K ரெஸல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வயாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.
தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில் புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ, சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களுக்கும் இதில் இடம்பெற்றுள்ளது. இது அனைத்தும் பார்வையாளர்களை ஈர்த்தது. அதே நேரத்தில் மற்ற டிஜிட்டல் தள போட்டியாளர்களை கலங்க செய்தது.
ஒவ்வொரு போட்டிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியை ஜியோ சினிமா தளத்தில் சுமார் 2.4 கோடி பேர் பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜியோ சினிமா தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற போட்டியாகவும் அமைந்தது.