கோவை சிங்காநல்லூரில் ‘எச்எம்எஸ்’ கட்டுமானம், அமைப்பு சாரா பேரவை சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பேசிய ‘எச்எம்எஸ்’ மாநில செயலாளர் ராஜாமணி. 
வணிகம்

வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் - ‘எச்எம்எஸ்’ தொழிற்சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: ஹிந்த் மஸ்தூர் சபா (எச்எம்எஸ்) கட்டுமானம், அமைப்புசாரா பேரவை மாநில அளவிலான மாவட்ட நலவாரிய கண்காணிப்புக் குழு உறுப்பினர் களுக்கான பயிற்சிப் பட்டறை சிங்கா நல்லூரில் நேற்று நடந்தது.

கட்டுமான அமைப்பு சாரா பேரவை துணைத் தலைவர் மனோகரன் வரவேற்றார். தொழிற்சங்க வரலாறு குறித்து ‘எச்எம்எஸ்’ மாநில செயலாளர் ராஜா மணியும், இன்றைய தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் ராஜேந்திரனும், தலைமை பண்பு குறித்து கவிஞர் கவிதாசனும் பேசினர்.

தொழிலாளர்களுக்கு பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு, உதவித் தொகை உள்ளிட்டவற்றை விரைந்து வழங்க அரசாணை வெளியிடப்பட்டும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்வதை ரத்து செய்து ஆதார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை அல்லது தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து உழவர் பாதுகாப்புத் திட்ட குடும்ப அட்டையை ரத்து செய்து, தனிநபர் அட்டை வழங்க வேண்டும்.

வீடு கட்டும் திட்டத்தில் எளிய முறையில் உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமின்றி உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவரும் நலத்திட்டங்களை பெற அரசு உதவ வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் பயிற்சிப் பட்டறையில் வலியுறுத்தப்பட்டன.

கட்டுமான அமைப்புசாரா பேரவைத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கோவை மண்டல செயல் தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT