புதுச்சேரி: புதுச்சேரியில் முதன் முறையாக பப்பாளியில் ஊடுபயிராக சாமந்தியை சேர்த்து புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லாபத்தை ஈட்டுவதாக விவசாயி அப்துல் தெரிவித்தார்.
புதுச்சேரி காட்டேரிக்குப் பத்தைச் சேர்ந்தவர் அப்துல். இவர் சொட்டுநீர் பாசனத்தில் கத்தரி, மிளகாய், பூச்செடிகள் பயிரிட்டு வருகிறார். அத்துடன் முதன் முறையாக பப்பாளியையும் பயிரிட்டுள்ளார். அதில் ஊடுபயிராக சாமந்தியும் பயிரிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "புதுச்சேரிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பெங்களூரில் இருந்து தான் பப்பாளி வந்தது. அதனால் ஆந்திராவில் இருந்து ஒரு பப்பாளி செடி ரூ. 21 வீதம் வாங்கி, புதுச்சேரி பகுதியில் முதன் முறையாக ஒரு ஏக்கரில் பயிரிட்டேன். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதால் விளைச்சல் அதிகரித்து அதிகளவு வருமானம் கிடைத்தது. பப்பாளியில் பூச்சித்தாக்குதல் வரும். அதனால் ஊடுபயிராக சாமந்தி பயிரிட்டேன்.
இதனால் அதில் கிடைக்கும் லாபம், ஆள்கூலி தர பயன்படும். மரத்திலேயே பப்பாளியை இயற்கையாக பழுக்க விட்டு அதன் பிறகே விற்கிறேன். ரசாயனம் பயன்படுத்துவதில்லை. அரசு மானியம் தந்தால் உதவியாக இருக்கும். பழைய பயிர்களை மட்டும் பயிரிடாமல் புதிய பயிர்களை, புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் நிச்சயம் லாபம் ஈட்டலாம்" என்றார்.