தருமபுரி விவசாயிகளிடம் கொள்முதல் செய்த தக்காளியை சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் விற்பனைக்கு வாங்கிய விவசாயிகள் . உடன் சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பாலசுப்ரமணியன். 
வணிகம்

தேசிய மின்னணு சந்தை மூலமாக தருமபுரியில் கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி சேலத்தில் விற்பனை

எஸ்.விஜயகுமார்

சேலம்: தேசிய மின்னணு சந்தை மூலமாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தருமபுரி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி சேலத்தில் விற்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் அபரிமிதமாக இருக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அதன் விலை கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை என்ற விலையிலேயே விற்கப்படுகிறது. எனினும் கிலோ ரூ.5 என்ற விலைக்கே இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, தேசிய மின்னணு சந்தை மூலம் தருமபுரி மாவட்டத்தில் தக்காளியை கொள்முதல் செய்து, அவற்றை சேலம் உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மற்றும் தருமபுரி (பொ) மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறியது: சேலம், தருமபுரி மாவட்டங்களில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் மிக அதிகமாக இருக்கிறது. இதனால், விலை சரிவு ஏற்பட்டதால் சாகுபடி செலவை விட மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விற்க வேண்டியிருப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாநகரில் உள்ள உழவர் சந்தைகளில் தேவையை விட குறைவாகவே தக்காளி வரத்து உள்ளது. எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து, உரிய விலையில் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் முதல்முறையாக, தேசிய மின்னணு சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டதை, சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கொள்முதல் செய்தது.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட 6.1 டன் தக்காளி, சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட உழவர் சந்தைகளில், விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டது.

இதன்மூலம், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. குறிப்பாக, இடைத்தரகரின்றி தக்காளியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வர்த்தகத்துக்கான தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தாமதமின்றி சேர்ந்துள்ளது, என்றார்.

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரையே விற்கப்படுகிறது. எனினும் கிலோ ரூ.5 என்ற விலைக்கே இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT