ரோம்: 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 6% உயர்ந்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி சென்றுள்ள பியூஷ் கோயல், இத்தாலி தலைநகர் ரோமில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 6% உயர்ந்து, அதன் மதிப்பு 447 பில்லியன் அமெரிக்கன் டாலராக உள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு. பெட்ரோலியம், மருந்துகள், ரசாயனம், கடல் சார்ந்த பொருட்கள் ஆகியவையே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பொருட்கள் மற்றும் சேவை இரண்டின் ஏற்றுமதியையும் சேர்த்தால் அதன் உயர்வு 14 சதவீதமாகவும், மதிப்பு 770 பில்லியன் டாலராகவும் உள்ளது. இது அதற்கு முந்தைய 2021-22 நிதி ஆண்டில் 676 பில்லியன் டாலராக இருந்தது. 2022-23ல் இந்தியாவின் சேவை ஏற்றுமதி அதற்கு முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் 27.16 சதவீதம் உயர்ந்து, 323 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவை இறக்குமதி 892 டாலராக இருந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் எந்த அளவு ஆரோக்கியமாக உள்ளன என்பதையும், ஏற்றுமதியை இந்தியா எந்த அளவு ஊக்குவித்து வருகிறது என்பதையும் இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை அடுத்து வளர்ந்த பொருளாதாரங்களால்கூட இத்தகைய வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஆனால், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி என இரண்டிலும் திருப்தி தரக்கூடிய வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது. வேலைவாய்ப்பு பெருக்கம், பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் இந்தியா உலகின் வளர்ச்சிக்கும் ஊக்கத்தை அளித்து வருகிறது.
இந்தியாவில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய், ஏற்றுமதி ஆகிய இரண்டும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பணவீக்கமும் வெகுவாக குறைந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உள்ளது. இவை எல்லாம் இந்தியாவின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை காட்டுகின்றன'' என்று அவர் தெரிவித்தார்.