சென்னை: மொபைல் வங்கி சேவைக்கு குரல்அங்கீகாரம் (வாய்ஸ் பயோமெட்ரிக்) பயன்படுத்தும் வசதியை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி காமகோடி இந்த வசதியை அறிமுகப்படுத்தி பேசியதாவது: தமிழ்நாட்டின் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1904-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனியார் துறை வங்கி சிட்டியூனியன் வங்கி.
நாடு முழுவதும்750 கிளைகள், 1,680 ஏடிஎம்களைக்கொண்டு செயல்படும் இவ்வங்கி,வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது மொபைல் வங்கி செயலி பயன்பாட்டில் உள்நுழைவதற்கு குரல் அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்திய அரசின் தொலைத் தொடர்பு துறை மற்றும் நிதி சேவைகள் துறையின் ஆதரவுடன் கெய்சன் செக்யூர் வாய்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் இந்த வசதி உருவாக்கப்பட்டது.
இதன் மூலம், சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் மோசடி நபர்களிடம் இருந்து பாதுகாக்கப்படுவர். பின் நம்பர், ஓடிபி போல குரல் அங்கீகாரம் மூலம் சமரசம் செய்ய முடியாது. நெட்பேங்கிங் பயனாளர்களுக்கு இந்த குரல் அங்கீகாரம் சேவை விரைவில் நீட்டிக்கப்படும்.
எந்த மொழியிலும் இந்தக் குரல் அங்கீகாரத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம், கிராமப்புற வாடிக்கையாளர்களும் தங்களது வங்கிச் சேவையை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று காமகோடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தொலைத் தொடர்பு துறை துணை இயக்குநர் ஜெனரல்கள் எஸ்.சுதாகர், ஆர்.கே.பதக், இயக்குநர் (தொழில்நுட்பம்) விஜய் கிருஷ்ணமூர்த்தி, வங்கி தொழில்நுட்ப மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த கள நிபுணர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.