சூளகிரியில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாகப் பசுமைக் குடிலில் பறிக்கப்பட்ட ரோஜா மலர்கள் அளவில் சிறிதும், பெரிதுமாக உள்ளது. 
வணிகம்

சூளகிரியில் கோடை வெயில் தாக்கத்தால் ரோஜா செடிகளில் நோய் தாக்கம் அதிகரிப்பு: பூக்களின் தரமும், உற்பத்தியும் பாதிப்பு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், சூளகிரி, பேரிகை பகுதியில் மலர்ச் செடிகளில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், பூக்களின் தரமும், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூர், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதேஷ்ண நிலை மலர் சாகுபடிக்குச் சாதகமாக உள்ளது.

பசுமைக் குடில்: இதனால், இப்பகுதியில் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம், கார்னேஷன் உள்ளிட்ட மலர்கள் பசுமைக் குடில் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போது, மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித் துள்ளதால், மலர்ச் செடிகளில் நோய் தாக்கம் அதிகரித்து, தரமும், உற்பத்தியும் பாதிக்கப் பட்டிருப்பதாக மலர் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சில ஆண்டுகளாக.. இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலைத் துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறியதாவது: நிகழாண்டில் வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி இறுதி முதல் அதிகரிக்கத் தொடங்கியது. வழக்கமாக சூளகிரி, ஓசூர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவாகக் காணப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வெளியில் இருப்பதை விடப் பசுமைக்குடில் உள்ளே வெப்பத்தின் தாக்கம் 3 முதல் 4 டிகிரி வரை அதிகமாக உள்ளது. இதனால், பசுமைக் குடில் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரோஜா, ஜெர்புரா மலர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை பூஞ்சான் நோய் தாக்கம் அதிகரித்து, பூக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளன.

விரைவில் உதிரும் நிலை: வழக்கமாக ரோஜா மொட்டுகள் தடித்து இருக்கும். தற்போது, ரோஜா இதழ் மென்மையாகவும், ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால், விரைவில் உதிர்ந்தும், காய்ந்து விடுகின்றன.

இதேபோல, மொட்டுக்கள் மலர அதிகபட்சம் 12 நாட்கள் ஆகும். தற்போது, 8 நாட்களில் மலர்ந்து விடுவதால், தரம் குறைந்து சந்தையில் வரவேற்பு குறைந்து, விலை இல்லை. இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT