புதுடெல்லி: மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி ரூ.3.69 லட்சம் கோடியாக இருந்தது.
இது கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலத்தில் ரூ.2.6 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 30% குறைவு ஆகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே தங்கம் இறக்குமதி சரிந்து வருகிறது. தங்கம் மீதான அதிக சுங்க வரி மற்றும் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகியவையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அதேநேரம் இதே காலத்தில் (2022-23) வெள்ளி இறக்குமதி 66% அதிகரித்து, 43 ஆயிரம் கோடியாகி உள்ளது.
இதே காலத்தில் தங்கம் இறக்குமதி குறைந்த போதிலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை சரியாகவில்லை. 2022-23-ல் வர்த்தக பற்றாக்குறை ரூ.20.25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22-ல் ரூ.14.1 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.