புதுடெல்லி: சிலிகான் வேல்லி மற்றும் கிரெடிட் சுயிஸ் வங்கிகளின் மீட்சிக்குப் பின்னரும் வங்கி அமைப்புகள் பெரும் கொந்தளிப்பை நோக்கிச் செல்லும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
க்ளாஸ்கோவில் நேர்காணல் ஒன்றில பேசிய ரகுராம் ராஜன், "நான் எப்போதுமே சிறந்தவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால். இன்னும் சிக்கல்கள் வரலாம் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், நாங்கள் பார்த்தவற்றில் சில எதிர்பாராமல் நடந்தவை. இதில் கவலையான விஷயம் என்னவென்றால், நீண்ட காலத்திற்கு நீடிக்கும் எளிமையான, அதிக அளவிலான பணப்புழக்கத்தின் மூலம் நீங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்ற முயற்சிக்கும்போது, அது தவறான ஊக்குவிப்பாக மாறி பலவீனமான அமைப்புகளையும் உருவாக்கி விடும். சிலிக்கான் வேல்லி மற்றும் கிரெடிட் சுயிஸ் வங்கிகளின் பிரச்சினைகள் நிதிகட்டமைப்பில் உள்ள ஆழமான சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கைகளாகும்.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தீவிர நிலைப்பாட்டை கொள்கை வகுப்பாளர்கள் அடிக்கடி மாற்றிவருவதால் மத்திய வங்கியாளர்களுக்கு சில சலுகைகள் கிடைத்துள்ளன. பணவியல் கொள்கையின் ஸ்பில் ஓவர்கள் மிகப் பெரியவை. அவை சாதாரணமான மேற்பார்வைகளால் கையாளப்படவில்லை என்பதை பல ஆண்டுகளாக நாம் உணரவேயில்லை.
நீங்கள் ஒரு கட்டமைப்புக்குள் இருக்க நிர்பந்திக்கப்படுவது என்பது ஒருவகையான அடிமைத்தனம் போன்றது. ஏனெனில். நீங்கள் குறைவான வட்டிக்காக எளிதான பணப்புழக்கத்துடன் அந்த கட்டமைப்பை நிரப்பும்போது, வங்கிகள் உங்களிடம், ‘நாங்கள் இதை வைத்துக் கொள்கிறோம். ஆனால், இதை வைத்து என்ன செய்வது? இதனைக் கொண்டு பணம் ஈட்டும் வழியை கண்டுபிடிப்போம்’ என்று கூறுகிறது. அது அவர்கள் பணப்புழக்கத்தினை திரும்பப் பெறுவதை பாதிப்புள்ளாக்குகிறது" என்று ரகுராம் ராஜன் கூறினார்.
கடந்த 2005-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்த ரகுராம் ராஜன், ஜாக்சன் ஹோல் உரையின்போது, உலக பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக, வங்கித் துறைக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திருந்தார். அதற்காக அமெரிக்காவின் முன்னாள் அரசு செயலாளரான லாரி சம்மர்ஸ், ரகுராமை கடுமையாக விமர்சித்திருந்தார்.
தற்போது ரகுராம் ராஜன் சிகாகோ பல்கலைகழகத்தின் வணிகப் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2013 முதல் 2016 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.